ஹமாஸ் ராணுவப் பிரிவின் புதிய தலைவர் கொல்லப்பட்டார்: இஸ்‌ரேல்

ஹமாஸ் ராணுவப் பிரிவின் புதிய தலைவர் கொல்லப்பட்டார்: இஸ்‌ரேல்

2 mins read
0f81068e-93be-4480-97fe-56a7652bb175
பல்வேறு திசைகளிலிருந்து ஒரே நேரத்தில் ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகள் முகம்மது ஒடே இருந்த கட்டடத்தைத் துளைத்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா சிட்டி: காஸாவில் செவ்வாய்க்கிழமையன்று (மே 26) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் புதிய தலைமைத் தளபதியான முகம்மது ஒடே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அவருக்கு முன்பு தலைமைத் தளபதியாக இருந்தவர் இதேபோன்ற தாக்குதலில் உயிரிழந்த சில நாள்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. காஸா சிட்டியின் மிகப் பரபரப்பான சந்தைப் பகுதியில் அமைந்திருந்த குடியிருப்பு உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்டத் தாக்குதலில், குறைந்தது மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயமடைந்தனர் என்று காஸா மருத்துவப் பணியாளர்களும் சாட்சிகளும் தெரிவித்துள்ளனர். முகம்மது ஒடே மற்றும் அவரது உதவியாளர்களின் நடமாட்டங்களைப் பல மாதங்களாக தனது உளவுத் துறை உன்னிப்பாகக் கண்காணித்து வந்ததாகவும் அதன் அடிப்படையில் அவர் மறைந்திருந்த கட்டடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவமும் ‘ஷின் பெட்’ பாதுகாப்பு அமைப்பும் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் இந்நேரத்தில், இஸ்ரேல் காஸா மீது நடத்தியுள்ள மிக மோசமான மரணத் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. முஸ்லிம்களின் புனித நாளான ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட மக்கள் கடைவீதிகளில் திரண்டிருந்த வேளையில், அல்-கயாலி கட்டடத்தின் மேல் தளங்கள் மீது இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.ந்

பல்வேறு திசைகளிலிருந்து ஒரே நேரத்தில் ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகள் இந்தக் கட்டடத்தைத் துளைத்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். தாக்குதல் நடந்த பகுதி மிகவும் குறுகலாகவும் இடிபாடுகள் மற்றும் மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாகவும் இருந்ததால், மேல் தளங்களைச் சென்றடைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் குடிமைத் தற்காப்புக் குழுவினரும் அவசரகாலக் குழுக்களும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்ஹமாஸ்