போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் தரவேண்டும்: ஹமாஸ்

போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் தரவேண்டும்: ஹமாஸ்

2 mins read
820e88ff-5609-4035-8532-bcf246176108
இஸ்ரேலின் கவச வாகனங்கள் காஸாவின் வடக்கு பகுதிக்குள் முன்னேறி வருவதாக பாலஸ்தீன மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

டோஹா: காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போரை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் தர வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்கொண்ட நேரத்தில் இந்த கருத்தை ஹமாஸ் முன்வைத்துள்ளது.

போர் நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் ஹமாஸ் ஒப்புக்கொள்ளும் என்றும் அப்படையின் மூத்த நிர்வாகி சமி அபு சூஹ்ரி தெரிவித்தார்.

பிளிங்கன் எகிப்து, இஸ்ரேலுக்கு திங்கட்கிழமை (ஜூன் 10) சென்றார். காஸாவில் நடக்கும் போர் லெபனான் நாட்டுக்கு பரவாமல் இருக்க பிளிங்கன் முயற்சி எடுப்பார் என்று கூறப்படுகிறது.

எகிப்து அதிபர் அப்டெல் ஃபட்டா அல்சிசியை பிளிங்கன் சந்தித்த பிறகு அவர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர் இஸ்ரேல், காஸா மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் தொடங்கியதில் இருந்து ஏழு முறை பிளிங்கன் மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்கொண்டார். தற்போது எட்டாவது முறையாக அவ்வட்டாரத்திற்கு பிளிங்கன் சென்றுள்ளார்.

இந்த வாரம் அவர் ஜோர்டான், கத்தார் நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் கவச வாகனங்கள் காஸாவின் வடக்கு பகுதிகளுக்குள் முன்னேறி வருவதாக பாலஸ்தீன மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வாழும் அந்தப் பகுதியில் ராணுவத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் சரக்கு விமானம் 10 டன்னுக்கும் மேலான உதவிப்பொருள்களை காஸாவின் வடக்குப் பகுதியில் ஜூன் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வானத்தில் இருந்து கீழே போட்டது.

கடந்த சில நாள்களாக அந்தப் பகுதிகளில் இஸ்ரேலின் நடவடிக்கை தீவிரமாக இருந்ததால் உதவிப்பொருள்கள் கொடுப்பதைத் தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தியிருந்தது.

போரால் துவண்டுள்ள காஸா மக்கள் மாபெரும் சுகாதார நெருக்கடியிலும் உணவு தட்டுப்பாட்டிலும் உள்ளனர். அவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் விமானங்கள், கப்பல்கள் மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கி வருகின்றன.

நில எல்லைகள் வாயிலாக வரும் பொருள்களை இஸ்ரேல் தீவிரமாக பரிசோதித்த பிறகே காஸாவுக்குள் அனுப்புவதால் காஸா மக்களுக்கு உதவிப்பொருள்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்போர்