தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டம்: அமெரிக்கா

2 mins read
ba172763-9cb2-4d1e-966e-983a19cfe90e
போர் நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்த பிறகு காணபப்பட்ட காஸா பகுதி. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஹமாஸ் அமைப்பு, காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அவ்வாறு நிகழ்ந்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்று வா‌ஷிங்டன் கூறியது.

“பாலஸ்தீன பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை நேரடியாக, மோசமான வகையில் மீறுவதாகும், சமரசரப் பேச்சுவார்த்தைகள் மூலம் காணப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சிறுமைப்படுத்துவதாகும்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டது.

“ஹமாஸ் இந்தத் தாக்குதலை நடத்தினால், காஸா மக்களைப் பாதுகாக்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையைக் கட்டிக் காக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு சொன்னது.

எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அறிக்கையில் விவரிக்கப்படவில்லை. அதேவேளை, பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்புக்கு இவ்வாரம் மிரட்டல் விடுத்திருந்தார்.

“ஹமாஸ், தொடர்ந்து காஸா மக்களைக் கொல்வதென்பது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இல்லை. அப்படி அவர்கள் செய்தால் களமிறங்கி அவர்களைக் கொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருக்காது,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார். ‘எங்கள்’ என்று கூறும்போது அது எந்தத் தரப்புகளைக் குறிக்கிறது என்பதை திரு டிரம்ப் விவரிக்கவில்லை.

கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஹமாசும் இஸ்ரேலும் சென்ற வாரம் ஒப்புக்கொண்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸாவில் மேற்கொண்டு வந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொண்டது. அதற்குக் கைமாறாக ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியப் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி ஹமாஸ், இஸ்ரேல் மீது எதிர்பாரா விதமாகத் தாக்குதல் நடத்தியது. அப்போதிலிருந்து இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் ஹமாசின் பிடியில் இருந்து வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக உயிருடன் இருக்கும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மாண்ட பிணைக் கைதிகளின் உடல்களைத் திரும்பித் தருவதும் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்த நடவடிக்கையில் அடங்கும்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட நடவடிக்கை, பல சிக்கல்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்