ஜெருசலேம்: ஹமாஸ் தரப்பு, சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் மூவரை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பதிலுக்கு, இஸ்ரேலில் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவர்.
சண்டை நிறுத்தம் நிலவும் வேளையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை காஸாவில் 15 மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் இலக்கைக் கொண்டுள்ளது.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் மேற்கொண்டதுடன் சிலரைப் பிணைபிடித்தனர். அவர்களில் ஒஹாட் பென் ஆமி, இலி ஷராபி, ஆர் லெவி மூவரும் அடங்குவர்.
இம்மூவரையும் ஹமாஸ் தரப்பு இஸ்ரேலிடம் சனிக்கிழமை ஒப்படைக்கும் என்று கூறப்பட்டது.
அதற்குப் பதிலாக, சிறையிலும் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் 183 பேரை இஸ்ரேல் விடுவிக்கும்.
இவர்களில் 18 பேர் ஆயுள் கைதிகள். 54 பேர் நீண்டகாலச் சிறைத்தண்டனையை நிறைவேற்றுவோர். மேலுல் 111 பேர் போரின்போது காஸாவில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று ஹமாசின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பரிமாற்றங்கள் மூலம் இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் 13 பேரும் ஹமாஸ் தாக்குதலின்போது கடத்தப்பட்ட தாய்லாந்து ஊழியர்கள் ஐவரும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு ஈடாக, பாலஸ்தீனக் கைதிகள் மற்றும் தடுத்துவைக்கப்பட்ட 583 பேரை இஸ்ரேல் விடுவித்துள்ளது.