காஸா: ஹமாஸ் அமைப்பு, 34 பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராய் இருப்பதாக ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அத்தகவலை வெளியிட்டார் என்று அல்-ஜஸீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. பிணைக் கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஓர் ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக ஹமாஸ், பிணைக் கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 5) ஏஎஃப்பி தெரிவித்தது.
பெண்கள், சிறார், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோரை இரு தரப்பும் விடுவிக்கும் என்று அந்த ஹமாஸ் அதிகாரி சொன்னதாக ஏஎஃப்பி குறிப்பிட்டது. அதேவேளை, விடுவிக்கப்பட இருப்போரின் நிலையை சரியாக அறிய ஹமாசுக்கு கால அவகாசம் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
“34 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது; உயிருடன் இருப்போர், மாண்டோர் அனைவரும் அடங்குவர். எனினும், யாரெல்லாம் உயிருடன் இருக்கின்றனர் என்பதை அடையாளம் காண அவர்களைப் பிடித்து வைத்தவர்களுடன் தொடர்புகொள்ள எங்களுக்கு அமைதியான ஒரு வார கால அவகாசம் தேவை,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார். நிரந்தரப் போர் நிறுத்தத்துக்கும் காஸாவிலிருந்து தனது துருப்புகளை மீட்டுக்கொள்வதற்கும் இஸ்ரேல் ஒப்புக்கொள்வதைப் பொறுத்தே போர் நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டு அதற்கு இணக்கம் காணப்படும் என்று பெயர் வெளியிடப்படாத ஹமாஸ் அதிகாரி சொன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இதற்கிடையே, காஸா போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் ஒப்பந்தம் வரையப்பட்டு அதற்கு இணக்கம் காணப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) நம்பிக்கை தெரிவித்தார். அதேவேளை, இம்மாதம் 20ஆம் தேதியன்று திரு ஜோ பைடன் அதிபர் பதவியிலிருந்து விலகிய பிறகே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என்ற உணர்வும் நிலவுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரைய திரு பிளிங்கன் பலமுறை முயற்சி செய்திருக்கிறார். போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காண திரு பைடன், தமது ஆட்சிக் காலம் முடியும் வரை தினமும் ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் உழைப்பார் என்று திரு பிளிங்கன் சொன்னார்.
“அடுத்த இரு வாரங்களில் இதை வெற்றிகரமாக முடிக்க நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்,” என்று தென்கொரியத் தலைநகர் சோலுக்குச் சென்ற திரு பிளிங்கன் செய்தியாளர்களிடம் கூறினார்.