ஆர்பெல் யெஹுட்டை விடுவிக்கவுள்ள ஹமாஸ்

2 mins read
7671d758-f953-40e4-aace-9d74c839ffb0
ஆர்பெல் யெஹுட். - படம்: பிரிங் தெம் ஹோம் நவ்

ஜெருசலம்: ஹமாஸ் அமைப்பு, வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜனவரி 31) தாங்கள் பிணைக்கைதியாகப் பிடித்து வைத்துள்ள ஆர்பெல் யெஹுட் எனும் பெண் உட்பட மூன்று பிணைக்கைதிகளை விடுவிக்கவிருக்கிறது.

காஸா போர் தொடர்பில் சமரசப் பேச்சு நடத்திவரும் கத்தார் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) அத்தகவலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஜனவரி 27) காலை வட காஸாவில் அப்பகுதி மக்கள் வீடு திரும்ப தாங்கள் அனுமதிக்கப்போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

பொதுமக்களில் ஒருவரான ஆர்பெல் யெஹுட், ராணுவ வீரர் ஏடம் பர்ஜர் உட்பட மூன்று பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தினார். வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட காஸா மக்கள் திங்கட்கிழமை காலை முதல் வட காஸாவில் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

கத்தாரின் அறிவிப்பு வெளியானதும் போர் நிறுத்தத்தின் முதற்கட்டத்தில் விடுவிக்கப்படவுள்ள இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் குறித்த தேவையான தகவல்களை சமரசப் பேச்சாளர்களிடம் சமர்ப்பித்துள்ளதாக ஹமாஸ் திங்கட்கிழமையன்று சொன்னது.

கத்தார், எகிப்து ஆகியவற்றைச் சேர்ந்த சமரசப் பேச்சாளர்களின் வழிநடத்தலில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு மத்திய, தென் காஸாவில் இருக்கும் சுமார் 650,000 பாலஸ்தீனர்கள் வட காஸாவில் வீடு திரும்ப வகைசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியத் தாக்குதல்கள் காரணமாகக் கடந்த 15 மாத காலத்தில் வட காஸாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 47,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்று காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸ் 250 பேரைப் பிணை பிடித்து வைத்தது. அத்தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து ஹமாஸ்-இஸ்ரேல் போர் மூண்டது. தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்