3 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்; 90 கைதிகளை விடுவித்த இஸ்‌ரேல்

2 mins read
d42bc710-dcc0-4488-a93f-20c49e4c9b51
ஹமாஸ் அமைப்பு விடுவித்த மூன்று பெண்களும் இஸ்‌ரேலில் உள்ள ஷேபா மருத்துவ நிலையத்தில் தங்கள் குடும்பத்தாருடன் மீண்டும் இணைந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

கெய்ரோ: காஸாவில் போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (ஜனவரி 20) நடப்புக்கு வந்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தத்தின் முதல் நாளன்று மூன்று பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

மறுமுனையில், 90 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்‌ரேல் விடுவித்தது.

வான்வழித் தாக்குதலால் பேரழிவு ஏற்பட்டு சீரழிந்து காணப்படும் தங்கள் வசிப்பிடங்களுக்குப் பாலஸ்தீனர்கள் திரும்புவதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.

அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை நிவாரணப் பணி லாரிகள் விநியோகித்து வருகின்றன.

காஸாவில் உள்ள சில பகுதிகளில் ஹமாஸ் போராளிகள் தங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்தபோது பாலஸ்தீனர்கள் அவர்களுக்கு ஆதரவாக ஆரவாரம் செய்தனர்.

இஸ்‌ரேலிலிருந்து பாலஸ்தீனக் கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்துகள் மேற்குக் கரையில் உள்ள ரமலா நகரை அடைந்தபோது அந்நகரின் வானம் வாணவேடிக்கையால் அலங்கரிக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட கைதிகளை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு காத்துக்கொண்டிருந்தனர்.

இஸ்‌ரேலியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளில் 69 பெண்களும் 21 வயது பதின்மவயது சிறுவர்களும் அடங்குவர்.

அவர்கள் மேற்குக் கரை மற்றும் ஜெருசலத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஹமாஸ் கூறியது.

இதற்கிடையே, மூன்று பெண் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

ஹமாஸ் போராளிகள் சூழ்ந்திருக்க, அந்த மூன்று பெண்களும் செஞ்சிலுவைச் சங்கத்துக்குச் சொந்தமான வாகனத்துக்குள் ஏறுவது நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

அதைப் பார்த்து டெல் அவிவ் நகரில் உள்ள தற்காப்பு அமைச்சின் தலைமையகத்துக்கு வெளியே கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்‌ரேலியர்கள் ஆனந்த கண்ணீருடன் ஆரவாரம் செய்தனர்.

திருவாட்டி ரோமி கொனேன், திருவாட்டி டோரோன் ஸ்டைன்பிரேச்சர், திருவாட்டி எமலி டமாரி ஆகியோர் மீண்டும் தங்கள் தாய்மார்களுடன் பத்திரமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

அவர்கள் மூவரும் நலமுடன் இருப்பதைக் காட்டும் காணொளியை அது வெளியிட்டது.

ஹமாஸ் போராளிகள் அவரைப் பிடித்துச் சென்றபோது திருவாட்டி டமாரி துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அதில் இரண்டு விரல்களை அவர் இழந்தார்.

அவர் இஸ்‌ரேலுக்குத் திரும்பியபோது கட்டு போடப்பட்ட கையுடன் அவர் சிரித்துக்கொண்டே தமது தாயாரைக் கட்டி அணைத்தார்.

மூவரையும் தாய்நாட்டுக்கு இஸ்‌ரேல் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக அவர்களிடம் தெரிவிக்கும்படி அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தொலைபேசி மூலம் ராணுவத் தளபதி ஒருவரிடம் தெரிவித்துக்கொண்டார்.

ஷேபா மருத்துவ நிலையத்தில் அந்த மூன்று பெண்களும் தங்கள் குடும்பத்தாருடன் மீண்டும் இணைந்தனர்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று இஸ்‌ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.

அதில் ஏறத்தாழ 1,200 பேர் மாண்டனர்.

250க்கும் மேற்பட்டோர் பிடித்துச் செல்லப்பட்டு பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர்.

அவர்களில் ஜனவரி 19ஆம் தேதியன்று விடுவிக்கப்பட்ட இந்த மூன்று பெண்களும் அடங்குவர்.

ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில் 47,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மடிந்ததாக காஸாவில் உள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸாவின் மக்கள்தொகை 2.3 மில்லியன்.

அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தற்போது வீடு இன்றி தவிப்பதாகக் கூறப்படுகிறது.

போரில் கிட்டத்தட்ட 400 இஸ்‌ரேலிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்