இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் பிணைக் கைதிகளுக்கு உதவுவோம்: ஹமாஸ்

2 mins read
39ddbec4-99b9-4116-9adb-5153eded39cc
பிணைக் கைதி ஒருவர் பரிதாபமான நிலையில் இருக்கும் காணொளியை ஹமாஸ் வெளியிட்டது. அது மேற்கத்திய நாடுகளைப் பெரும் கோபத்தில் தள்ளியுள்ளது.  - காணொளிப் படம்: ஏஎஃப்பி

காஸா: இஸ்ரேல் காஸாமீதான ஆகாயத் தாக்குதலை நிறுத்த வேண்டும், உதவிப்பொருள்களை காஸாவுக்குள் அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளுக்கு உதவுவோம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தங்களது உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டால் செஞ்சிலுவை அமைப்புகளுடன் இணைந்து பிணைக் கைதிகளுக்குத் தேவையான உதவி வழங்கப்படும் என்றும் ஹமாஸ் கூறியுள்ளது.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 50 பிணைக் கைதிகள் உள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இதுவரை காஸாவில் உள்ள பிணைக் கைதிகளை எந்த ஒரு மனிதாபிமான அமைப்பும் நேரடியாக அணுகியதில்லை. அவர்களின் நிலைமை குறித்து எந்தத் தகவலும் இல்லை.

பிணைக் கைதி ஒருவர் பரிதாபமான நிலையில் இருக்கும் காணொளியையும் ஹமாஸ் வெளியிட்டது. அது மேற்கத்திய நாடுகளைப் பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி ஹமாஸ் வெளியிட்ட ஒரு காணொளியில் பிணைக் கைதியான எவியாட்டர் டேவிட் ஒரு குழியைத் தோண்டிக்கொண்டிருந்தார். உடல் நலிந்து எலும்பும் தோலுமாக இருந்த டேவிட் ஓர் இஸ்ரேலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளியைக் கண்ட பிறகு பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இஸ்ரேல், ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்துடன் சிறப்புக் கூட்டம் ஒன்றைச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) காலை நடத்தவுள்ளது. அதில் காஸாவில் உள்ள பிணைக் கைதிகளின் நிலவரம் குறித்து பேசப்படவுள்ளது.

இந்நிலையில், காஸாவில் உணவு இல்லாமல் பட்டினியால் மேலும் ஆறு பேர் மாண்டனர்.

போதிய உணவு இல்லாமல் இதுவரை பட்டினியால் 175 காஸா மக்கள் மடிந்துள்ளனர், அவர்களில் 93 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவுக்குள் உணவு உள்ளிட்ட உதவிப்பொருள்களை அனுப்பாமல் இஸ்ரேல் பல மாதங்களாக நிறுத்தி வைத்தது. அதனால் காஸா மக்கள் உணவு இல்லாமல் தவித்தனர்.

தற்போது இஸ்ரேல் காஸாவுக்குள் சில உதவிப் பொருள்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்