தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹமாஸ்: பெண் பிணைக்கைதி கொல்லப்பட்டார்

2 mins read
c766fcfc-30b8-427e-affd-d9de6b94a7e8
ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இஸ்‌ரேலியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: இஸ்‌ரேலியப் பெண் பிணைக்கைதி ஒருவர் காஸாவின் வடக்குப் பகுதியில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்தது.

இத்தகவல் உறுதி செய்யவோ மறுக்கவோ முடியவில்லை என்று இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

ஹமாஸ் போராளிகள் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்‌ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் 1,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

251 பேரை ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்றனர்.

அந்தப் பிணைக்கைதிகளில் 34 பேர் மாண்டுவிட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

97 பிணைக்கைதிகள் காஸாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்‌ரேல் நம்புகிறது.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு வார போர் நிறுத்தத்தின்போது 105 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் 80 இஸ்‌ரேலியர்களும் அடங்குவர்.

அவர்களது விடுதலையை உறுதி செய்ய 240 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

இந்நிலையில், அடைத்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளில் ஒருவரான அப்பெண் மாண்டுவிட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் அப்பெண்ணின் அடையாளத்தை அது வெளியிடவில்லை.

அவர் எவ்வாறு மாண்டார் என்பது குறித்தும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை.

பிணைக்கைதி கொல்லப்பட்டதைக் காட்டும் காணொளியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

அதை இஸ்‌ரேலிய ராணுவம் ஆராய்ந்து வருகிறது.

இதற்கிடையே, அப்பெண்ணை அடைத்து வைத்திருந்தோருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் பல வாரங்கள் கழித்து அவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் எஸ்ஸித்தீன் அல் கஸாம் படைப் பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா தெரிவித்தார்.

அப்பெண் இன்னொரு பெண்ணுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

அந்த இன்னொரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்ததாக அபு உபைதா தெரிவித்தார்.

அபு உபைதா இந்த அறிக்கையை வெளியிட்டதற்கு முன்பு ஐந்து ராணுவ வீரர்கள் உட்பட பத்து பெண் பிணைக்கைதிகள் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்