தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது: மலாலா

1 mins read
75299368-ed60-4980-8081-230ae8b3cde5
நோபெல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய் (வலமிருந்து இரண்டாவது), முஸ்லிம் சமூகங்களில் பெண் குழந்தைகளின் கல்வி எனும் தலைப்பிலான அனைத்துலக உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இஸ்லாமாபாத் சென்றுள்ளார். - படம்: ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்: நோபெல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய், தாயகமான பாகிஸ்தானுக்குத் திரும்பியதில் மகிழ்வதாக சனிக்கிழமை (ஜனவரி 11) கூறியுள்ளார்.

முஸ்லிம் சமூகங்களில் பெண் குழந்தைகளின் கல்வி எனும் தலைப்பிலான அனைத்துலக உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.

கல்வி ஆர்வலரான மலாலாவை 2012ஆம் ஆண்டு அவர் பள்ளிச் சிறுமியாக இருந்தபோது, பாகிஸ்தானில் இயங்கிய தலிபான் அமைப்பினரால் துப்பாக்கியால் சுட்டனர்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் பாகிஸ்தானுக்குச் சிலமுறை மட்டுமே சென்றார்.

இந்நிலையில், உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சனிக்கிழமை அவர் இஸ்லாமாபாத் சென்றார்.

பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், ஜனவரி 11ஆம் தேதி தொடங்கிவைக்கும் அந்த இரண்டு நாள் மாநாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். அந்த நாடுகளில் பல்லாயிரக்கணக்கான சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதில்லை.

மாநாட்டில் மலாலா, ஜனவரி 12ஆம் தேதி உரையாற்றுவார் என்று கூறப்பட்டது.

“பெண் குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குச் செல்வதற்கான உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் பேச உள்ளேன். ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடத்தப்பட்ட குற்றச்செயல்களுக்கு உலகத் தலைவர்கள் தலிபான் அமைப்பைப் பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என்பது குறித்தும் பேசவிருக்கிறேன்,” என்று மலாலா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசாங்கத்திற்கும் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருப்பதாகவும் ஆனால் அதற்குப் பதிலில்லை என்றும் பாகிஸ்தானியக் கல்வி அமைச்சர் காலிட் மக்பூல் சித்திக்கி கூறினார்.

குறிப்புச் சொற்கள்