நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான திருவாட்டி கமலா ஹாரிசும் திரு டோனல்ட் டிரம்ப்பும் உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 10ஆம் தேதி (சிங்கப்பூரில் செப்டம்பர் 11) தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பதைக் காண மில்லியன்கணக்கான அமெரிக்கர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இவ்வேளையில், இருவரது பிரசாரக் குழுக்களும் சமூக ஊடகங்களில் மேலும் ஒரு போட்டிக்குத் தயாராவதாகக் கூறப்படுகிறது.
அதிகம் பரவக்கூடிய ‘மீம்ஸ்’ எனப்படும் நகைப்பழிகைகள், காணொளிகள் போன்றவற்றுடன் அவை தயாராகி வருவதாகத் தெரிகிறது.
கடந்த அதிபர் தேர்தலைக் காட்டிலும் இம்முறை சமூக ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இருதரப்புமே அவற்றின் கட்சிக் கொள்கைகளையும் வேட்பாளர்களையும் பற்றிய தகவல்களைப் பரவலாக அறியச்செய்யும் முயற்சியில் சிறந்த சமூக ஊடகப் படைப்பாளர்களைப் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தொலைக்காட்சி விவாதம் தொடங்குவதற்கு முன்பாக, இருதரப்புப் பிரசாரக் குழுக்களும் மின்னிலக்கப் போட்டாபோட்டியில் ஈடுபட்டுள்ளன. எதிர்த்தரப்பு வெளியிடும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கப் போவதாகவும் அவை கூறியுள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், எக்ஸ், டிக்டாக் தளங்களில், திருவாட்டி ஹாரிசைவிடத் திரு டிரம்ப்பைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.
திருவாட்டி ஹாரிசின் பிரசாரக் குழு பதிவேற்றிய டிக்டாக் காணொளிகளுக்கு 100 மில்லியன் விருப்பக் குறியீடுகளும் டிரம்ப் பிரசாரக்கு ழுவின் காணொளிகளுக்கு 44 மில்லியன் விருப்பக் குறியீடுகளும் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
விவாதத்தின்போது டிரம்ப் சொல்லக்கூடிய பொய்கள் எனத் தாங்கள் கருதும் அம்சங்களைக் காணொளியாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது ஹாரிஸ் பிரசாரக் குழு. அவர் அவ்வாறு கூறினால் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவும் அது உறுதிகூறியுள்ளது.
டிரம்ப் பிரசாரக்கு ழுவும் ஹாரிஸ் சொல்லும் அம்சங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கப்போவதாகச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளது.