லண்டன்/லாஸ் ஏஞ்சலிஸ்: பிரிட்டன் இளவரசர் ஹேரியும் அவரது மனைவி மேகன் மார்க்கலும் இந்த மாதத்தில் பிரிட்டனுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரச குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி அமெரிக்காவில் குடியேறிய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். பிரிட்டிஷ் ஊடகங்கள் தங்களின் நிம்மதியைக் குலைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, அரச குடும்பத்தின்மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் அவர்களின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
சஸ்ஸெக்ஸ் கோமகன், சீமாட்டியாகப் பொறுப்பு வகித்த இளவரசர் ஹேரியும் அவரது மனைவி மேகனும் தங்களது பிள்ளைகளான 7 வயது ஆர்ச்சி, 5 வயது லிலிபெட் ஆகியோருடன் கலிஃபோர்னியாவிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் முதல் பிள்ளைகள் பிரிட்டனிலுள்ள பள்ளியில் கல்வி பயிலத் தொடங்குவர்.
ஹேரி தம்பதியின் இந்த முடிவை மன்னர் சார்லஸ் வரவேற்றுள்ளார். இருப்பினும், அவர்கள் அரச குடும்ப அதிகாரபூர்வப் பணிகளை ஆற்றமாட்டார்கள் என்றும் அரச மாளிகையில் வசிக்கமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேரி-மேகன் தம்பதியின் முடிவு குறித்துக் கருத்துத் தெரிவிக்க இளவரசர் ஹேரியின் செய்தித் தொடர்பாளரும் பக்கிங்ஹாம் அரண்மனையும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அரச குடும்பத்துடனும் ஊடகங்களுடனும் கருத்து வேறுபாடுகள் நிலவியபோதிலும், குடும்பத்தில் மீண்டும் சுமுக உறவு ஏற்படுவது நல்லது என்று பிரிட்டிஷ் அமைச்சர் லூசி போவெல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) பிபிசிக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
ஹேரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் பல்வேறு ஊடகத் திட்டங்களில் ஈடுபட்டபோதிலும், சில ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டதுடன் எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


