நியூயார்க்: ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அதன் மாணவர்களில் அதிகபட்சம் 15 விழுக்காடு மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“அவர்கள் 15 விழுக்காட்டை உச்சவரம்பாக வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்து, 31 விழுக்காடல்ல,” என்று திரு டிரம்ப் புதன்கிழமை (மே 28) வெள்ளை மாளிகையில் கூறினார்.
“ஹார்வர்ட் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் பயில விரும்புவோர் (இங்கு) இருக்கின்றனர். வெளிநாட்டு மாணவர்கள் இருப்பதால் அவர்களால் அந்நிலையங்களில் சேர்ந்துகொள்ள முடியவில்லை,” என்றார் திரு டிரம்ப்.
ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதை திரு டிரம்ப் சென்ற வாரம் தடை செய்தார். அதனைத் தொடர்ந்து ஹாவர்டின் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை தொடர்பில் திரு டிரம்ப் குறிப்பிட்ட இலக்கை முன்வைத்துள்ளார்.
அவரின் அரசாங்கம். ஹார்வர்ட் மட்டுமின்றி பொதுவாக கல்விக் கழகங்களை அவற்றின் கொள்கைகளை மாற்ற நடவடிக்கை எடுத்துவருகிறது. மாணவர் சேர்க்கை, ஊழியர்களை வேலைக்கு எடுப்பது ஆகியவை அந்தக் கொள்கை மாற்றங்களில் அடங்கும்.
டிரம்ப் அரசாங்கத்தின் இம்முயற்சி, இஸ்ரேல்-காஸா போர் தொடர்பில் யூதர்களுக்கு எதிராக நடந்துவரும் ஆர்ப்பாட்டங்களை முடக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், திரு டிரம்ப் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை முக்கியமாகக் குறிவைத்துச் செயல்படுகிறார். ஆய்வுகளை மேற்கொள்ள ஹார்வர்டுக்கு வழங்கப்பட்ட 2.6 பில்லியன் டாலருக்கும் (3.4 பில்லியன் வெள்ளி) அதிகமான நிதியுதவியை அவர் நிறுத்தினார்.
நிதியுதவி நிறுத்தப்பட்டதன் தொடர்பில் ஹார்வர்ட், அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விதிக்கப்பட்ட தடையை இப்போதைக்குச் செயல்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 6,800 மாணவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை, ஹார்வர்டில் சேரும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 27 விழுக்காடாகும்.
“கல்விக்காக வெளிநாடுகளிலிருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்த நாட்டை நேசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்,” என்று திரு டிரம்ப் புதன்கிழமை கூறினார்.
இதற்கிடையே, சீனாவிலிருந்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவர் விசாக்களைத் தீவிரமாக மீட்டுக்கொள்ளப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ருபியோ புதன்கிழமை இவ்வாறு அறிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள், முக்கியத் துறைகளில் கல்வி பயில்வோர் சம்பந்தப்பட்ட மாணவர்களில் அடங்குவர் என்று திரு ருபியோ குறிப்பிட்டார்.