நியூயார்க்: உலகின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏப்ரல் 11ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து பெற்ற மின்னஞ்சலை அடுத்து வெள்ளை மாளிகையைச் சாடியுள்ளது.
வெள்ளை மாளிகையின் மதவெறி எதிர்ப்பு பணிக்குழுவிடமிருந்து பல்கலைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் வேலைக்கு ஆள்சேர்ப்பது, மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் ஆகியவை குறித்த நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
வெள்ளை மாளிகைமீது நடவடிக்கை எடுக்கப்போவதாக ஏப்ரல் 14ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறியதைத் தொடர்ந்து அனுமதியின்றி அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கூறினர்.
அந்த மின்னஞ்சல் எப்படி தவறாக அனுப்பப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்ற அவர்கள், பணிக்குழுவின் மதவெறி எதிர்ப்புப் பணிக்குழு உறுப்பினர் ஷோன் கெவனி அதனை அனுப்பியதாகக் குறிப்பிட்டனர்.
அதோடு அனுப்பப்பட்ட மின்னஞ்சலையும் திரு டிரம்ப் நிர்வாகம் திரும்ப பெறவில்லை.
மின்னஞ்சல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சொன்னதால் திரு டிரம்ப் பல்கலைக்கான 2.2 பில்லியன் டாலர் மானியத்தைப் பிடித்துவைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
அதோடு பல்கலையின் வரி விலக்கு தகுதியையும் ரத்துசெய்யப்போவதாக திரு டிரம்ப் மிரட்டினார்.