உரை நிகழ்த்த ஹசீனா திட்டம்; இந்திய நிலைப்பாட்டைக் கோரும் பங்ளாதே‌ஷ்

உரை நிகழ்த்த ஹசீனா திட்டம்; இந்திய நிலைப்பாட்டைக் கோரும் பங்ளாதே‌ஷ்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

04 Aug 2026 - 4:26 pm

1 mins read

டாக்கா: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்ளாதேசின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதுடெல்லியில் காணொளி வாயிலாக உரை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பங்ளாதேஷ் இடைக்கால அரசு, அதுகுறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்ளாதேசில் மக்கள் போராட்டம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, ஹசீனா தமது பிரதமர் பதவியைவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

ஹசீனாவை நாடுகடத்த இந்தியாவிடம் பங்ளாதே‌ஷ் தொடர்ந்து கோரி வருகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் பங்ளாதேஷ் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக அண்மைய நேர்காணல் ஒன்றில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஹசினா தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, புதன்கிழமை (ஆகஸ்ட் 5) புதுடெல்லியில் நடைபெறும் தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கழக நிகழ்ச்சியில் காணொளி வழியாகப் பேச இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பங்ளாதேசின் தற்காலிக வெளியுறவு அமைச்சரான முகமது தவ்ஹீத் ஹுசைன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர் இது போன்ற அரசியல் உரை ஒன்றை நிகழ்த்துவது என்பது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்