தாய்லாந்தின் தென் பகுதியில் உள்ள நகரமான ஹாட் யாயில் வெள்ளம் கரைபுரண்டோடியது. வெள்ளம் காரணமாக அங்கு பலர் மாண்டுவிட்டனர்.
அந்நகரத்தைச் சேர்ந்தவர்களும் சுற்றுப்பயணிகளும் கடந்த பல நாள்களாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில், ஹாட் யாயில் இருந்த 600க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிங்கப்பூர் திரும்புவதாக வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) கூறியது.
வெள்ளம் காரணமாக ஹாட் யாய் நகரில் இருந்த 893 சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சின் உதவியை நாடினர்.
அவர்களில் 608 பேர், சிங்கப்பூருக்கு வரும் விமானத்தில் ஏறிவிட்டதாகவும் அல்லது ஹாட் யாய் அனைத்துலக விமான நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) ஹாட் யாய் நகரிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும் முதல் விமானம், மாலை 4 மணிக்குச் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது விமானம் சனிக்கிழமை (நவம்பர் 29) அதிகாலை 2 மணி அளவில் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஹாட் யாயில் மழையின் தீவிரம் குறைந்து வருவதாகவும் வெள்ளநீர் வடிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைத் துயர்துடைப்பு முகாம்களுக்கு அல்லது விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஹாட் யாய் நகரின் மத்தியப் பகுதியிலிருந்து சிங்கப்பூரர்களை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேன்களுக்கு ஏற்பாடு செய்வதாக வியாழக்கிழமை (நவம்பர் 27) காலையில் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.

