பேங்காக்: ஹட் யாய், சொங்லா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தாய்லாந்து சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அந்நாட்டுப் பயணக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மலேசியச் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்யக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
கடந்த வார இறுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்ட மலேசியச் சுற்றுலா நிறுவனங்கள் தாய்லாந்தின் தெற்கு மாநிலங்களின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தனர் என்று பயணக்கழகத்தின் தலைவர் தப்பனி கியாட்பாய்பூல் தெரிவித்தார்.
சுற்றுலா நிறுவனங்கள் ஹட் யாய் பகுதி தொடர்பாக அதிகம் வினவியதாக அவர் குறிப்பிட்டார்.
ஹட் யாய் வட்டாரத்தில் நிலவரம் சரியில்லாத காரணத்தால், இவ்வாரம் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மலேசியப் பயணிகள் தங்களுடைய பயணங்களை ரத்து செய்யும் சூழல் எழுந்துள்ளது.
அதேபோல், தாய்லாந்து வெள்ளம் தொடர்பாக மலேசிய ஊடகங்களும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.
மேலும், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மலேசியப் பயணிகள் குறித்த கதைகளை சமூக ஊடகங்ககளும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இது பயணம் செய்ய விரும்புபவர்கள் மத்தியில் பயத்தையும் உண்டாக்குகிறது.
இதற்கிடையே, மலேசிய அரசாங்கமும் தெற்கு தாய்லாந்துக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹட் யாய் வட்டாரத்தில் நவம்பர் 21 முதல் 24ஆம் தேதி வரை கனத்த மழை பெய்தது. இதனால் அங்குப் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
நதிகள் பலவற்றில் நீர் நிறைந்து ஆபத்தான நிலையை எட்டியது.
தாய்லாந்து மக்கள், சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் தங்களது ஹோட்டல்களில் சிக்கித் தவிக்க நேரிட்டது. அவர்களால் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியவில்லை.
ஹட் யாய் வட்டாரத்தில் 4,000க்கும் அதிகமான மலேசியர்கள் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

