தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்: சலுகைகளை அள்ளித் தரும் சீனா

2 mins read
084679dd-dfa7-43ab-9c8b-448541914ca6
ஹோஹாட் நகரில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்குக் குழந்தையின் 10வது வயது வரை ஆண்டுக்கு 1,800 வெள்ளி (10,000 யுவான்) மானியங்கள் வழங்கப்படும். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் ஹோஹாட் நகரம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்குப் பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

மார்ச் மாதம் குழந்தைகளுக்கான பராமரிப்பு மானியங்களை அந்நகர அரசாங்கம் அறிவித்தது. மேலும் தாய்மார்களுக்கு இலவசமாகத் தினமும் ஒரு கிண்ணம் பால் வழங்கப்படுகிறது.

நாடளவில் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக இன்னர் மங்கோலியாவின் தலைநகரான ஹோஹாட் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதன்படி ஹோஹாட் நகரில் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 1,800 வெள்ளி (10,000 யுவான்) ஒரு முறை வழங்கப்படும்.

இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தம்பத்திக்கு குழந்தையின் ஐந்து வயது வரை ஆண்டுக்கு 1,800 வெள்ளி வழங்கப்படும்.

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்குக் குழந்தையின் 10வது வயது வரை ஆண்டுக்கு 1,800 வெள்ளி மதிப்புள்ள மானியங்கள் வழங்கப்படும்.

ஹோஹாட் நகரைப் போலவே சீனாவில் 20க்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் குழந்தைகளுக்கான பராமரிப்பு மானியங்களை அறிவித்து வருகின்றன.

இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதன்மூலம் இளையர்கள் திருமணம் செய்துகொள்வார்கள், இளைய தம்பதிகள் குழந்தைகளையும் பெற்றுக்கொள்வார்கள் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சரிந்து வருகிறது. திருமணங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம் சீன அரசாங்கம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1980ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அமலில் வைத்திருந்த ஒரு குழந்தை கொள்கைதான்.

இருப்பினும் தற்போது சீனாவில் நகரமயமாக்கல் வேகமாக உள்ளது. மேலும் வாழ்க்கைச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இளையர்களிடம் திருமணம் செய்வதிலும் குழந்தைப் பெற்றுக்கொள்வதிலும் தயக்கத்தை ஏற்படுத்துகிறது.

மக்கள்தொகை சரிவதை அறிந்த சீன அரசாங்கம் 2021ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

இம்மாதத் தொடக்கத்தில் சீனாவின் நாடாளுமன்றத்தில் மக்கள் தொகை குறித்துப் பேசப்பட்டது. அப்போது அந்நாட்டுப் பிரதமர் லீ சியாங் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாகக் குழந்தைகளுக்கு இலவசப் பாலர் கல்வி மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்பு மானியங்களை அறிவித்தார்.

அறிவிக்கப்பட்ட மானியங்கள் மக்களுக்கு எவ்வாறு உதவுகின்றன, திட்டங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்