பெட்டாலிங் ஜெயா: வட்டார புகைமூட்டத்திற்குக் காரணமான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இந்தோனீசியாவிற்கு தீயணைப்புச் சாதனங்களை அனுப்ப மலேசியா இன்னமும் தயார் நிலையில் உள்ளதாகத் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்த வாய்ப்பை மீண்டும் வலியுறுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான அரசதந்திர உறவுகளுக்குப் பாராட்டும் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“காட்டுத்தீயை அணைக்க இந்தோனீசியாவுக்கு உதவும் வாய்ப்பு இன்னமும் உள்ளது. தேவைப்பட்டால் உதவிச் சாதனங்களை வழங்க மலேசியா தயார் நிலையில் உள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், எந்த வகையான உதவியை ஏற்றுக்கொள்வது என்பது குறித்து மலேசியாவுக்கு இந்தோனீசியாவிடமிருந்து இதுவரை முழுமையான பதில் கிடைக்கவில்லை என்று திரு ஃபஹ்மி கூறினார்.
வெளியுறவு அமைச்சும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சும் இந்தோனீசிய அதிகாரிகளிடமிருந்து கூடுதல் விவரங்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்தோனீசியாவில் காட்டுத் தீயை மூட்டும் நடவடிக்கைகளில் மலேசிய நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திரு ஃபஹ்மி கூறினார்.
முன்னதாக, இந்தோனீசிய அதிகாரிகள் 11 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
