புகைமூட்டம்: இந்தோனீசியப் பொருள்களைப் புறக்கணிக்கும் மலேசியர்கள்

புகைமூட்டம்: இந்தோனீசியப் பொருள்களைப் புறக்கணிக்கும் மலேசியர்கள்

படம்: ஏஎஃப்பி

25 Oct 2026 - 5:22 pm

2 mins read

கோலாலம்பூர்: எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினை காரணமாக மலேசியர்கள் இந்தோனீசியப் பொருள்களைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஹஸ்னா என்ற 67 வயது மாது, பல ஆண்டுகளாகத் தாம் பயன்படுத்தி வந்த இந்தோனீசியத் தயாரிப்புகளைக் கைவிட முடிவுசெய்துள்ளார். இந்தோகஃபே காப்பி, சோஸ்ரோ தேநீர், காரா தேங்காய்ப்பால் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு மலேசியத் தயாரிப்புகளைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் புகைமூட்டம் மட்டுமன்று. மலேசியாவிற்கு இந்தோனீசியாதான் உயிர்வாயுவை வழங்குகிறது என்று இந்தோனீசிய அரசாங்கத் தொடர்புப் பிரிவுத் தலைவர் சியாஹ்கண்டா நைங்கோலன் கூறிய சமூக ஊடகக் கருத்தும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

புகைமூட்டத்தால் மலேசியாவில் பள்ளிகள் மூடப்படுவதோடு, பொருளியல் இழப்புகளும் ஏற்படுகின்றன. இத்தகைய சூழல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சோதிப்பதாக அமைந்துள்ளன.

மலேசிய இணையவாசிகளும் இந்தோனீசியப் பொருள்களைத் தவிர்க்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

சல்பியா அகமது என்ற பயனீட்டாளரின் பதிவுக்கு 400க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவாகியுள்ளன. உள்ளூர்த் தயாரிப்புகளுக்கு மாறுவதாகப் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உயிர்வாயுக் கிண்டல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என மலேசிய இணையவாசிளும் கூறுகின்றனர்.

எனினும், ஒட்டுமொத்தப் புறக்கணிப்பால் பெரிய தீர்வு கிடைக்காது என்று பொருளியல் வல்லுநர் பர்ஜோயய் பர்டாய் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகம் 2025ஆம் ஆண்டில் 26.6 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. எனவே, காடுகளை எரிக்கும் நிறுவனங்களை மட்டும் குறிவைத்து, நிதி நிறுவனங்கள்மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையது சாதிக், காடுகளை அழிக்கும் நிறுவனங்களுக்கு வங்கிகள் நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில் மலேசிய, சிங்கப்பூர் நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அவற்றைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபுகைமூட்டம்இந்தோனீசியா