புகைமூட்டம்: மலேசியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பாதிப்பு

புகைமூட்டம்: மலேசியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பாதிப்பு

படம்: ஏஎஃப்பி

07 Sep 2026 - 9:32 am

2 mins read

பெட்டாலிங் ஜெயா: கடுமையான புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்யும் அல்லது தள்ளி வைக்கும் நிலைமை அவற்றின் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிற நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெற இருந்த பிஜே மாரத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதேவேளை, அன்றைய தினம் நண்பகலில் காற்றின் மாசுக் குறியீடு 169ஐ எட்டியதால் சிலாங்கூரில் நடைபெற இருந்த திடல்தடம், நீச்சல், வில்வித்தை உள்ளிட்ட நான்கு விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. உடற்குறையுள்ளோருக்கான போட்டிகள் அவை.

அதேபோல கூச்சிங்கில் நடைபெற இருந்த ஓட்டப் பந்தயம் செப்டம்பர் 6ஆம் தேதிக்குப் பதில் அக்டோபர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருதியே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் போட்டி ரத்து செய்யப்பட்டால் நுழைவுக் கட்டணம் பொதுவாகத் திருப்பித் தரப்படாது என்று போட்டியின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிஜே மாரத்தான் அமைப்பாளர் கடைசி நேரத்தில் போட்டி ரத்து செய்யப்பட்டதை அறிவித்தார்.

புகைமூட்டம் மோசமடைந்தபோதிலும், கோலாலம்பூரில் சில போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெற்றன.

குழந்தைகளின் நலன்

இதற்கிடையே, புகைமூட்டச் சூழலால் தங்கள் குழந்தைகளின் உடல்நலம் குறித்துக் கவலைப்படும் பெற்றோர், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது குறித்து தீர்மானிக்கலாம் என்று மலேசிய கல்வி அமைச்சர் ஃபத்லினா சிதேக் தெரிவித்துள்ளார்.

தாங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க முடிவு செய்தால், அது குறித்துப் பள்ளிக்குத் தகவல் தெரிவித்தால் போதுமானது என்று அவர் கூறினார்.

“தற்போதைய புகைமூட்டச் சூழல் குறித்துப் பெற்றோருக்கு இருக்கும் கவலைகளை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குழந்தைகளின் உடல்நலனும் பாதுகாப்பமே முதன்மையானதாக உள்ளது,” என்று அவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், திங்கட்கிழமை நாடு முழுவதுக்குமான காற்றுத் தரக் குறியீடு 40 பகுதிகளில் ஆரோக்கியமற்றதாகவும் 24 பகுதிகளில் மிதமான அளவிலும் பதிவாகி இருந்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபுகைமூட்டம்போட்டி