ஐக்கிய நாட்டுச் சபை (ஐநா) அணுசக்திக் கண்காணிப்புக் குழுவின் தலைமை இயக்குநரான ரஃபாயெல் மரியானோ குரோசி, வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 25) சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.
தமது ஒரு நாள் பயணத்தின்போது அனைத்துலக அணிகுண்டு எரிசக்தி அமைப்பின் (ஐஏஇஏ) தலைமை இயக்குநரான அவர், அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் சந்திப்பார். திரு குரோசி, 64, மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழிநுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோரையும் சந்திப்பார் என்று வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 24) கூறியது.
மேலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பூர் அணுசக்தி ஆய்வு, பாதுகாப்புக் கழகம் நடத்தும் நிகழ்வில் திரு குரோசி விரிவுரையும் ஆற்றுவார்.
2000ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர், ஏஐஇஏவுடன் இணைந்து அணுசக்தி மருந்து, பொதுக் கல்வி, உணவுப் பாதுகாப்பு போன்றவற்றில் வளரும் நாடுகளுக்கு ஆதரவளித்துவருகிறது. இந்நடவடிக்கை, 2015ஆம் ஆண்டு ஐஏஇஏ-சிங்கப்பூர் மூன்றாம் நாட்டுப் பயிற்சித் திட்டத்தின்கீழ் (IAEA-Singapore Third Country Training Programme) அதிகாரபூர்வமானது.
அந்தக் காலகட்டத்தில் ஐஏஇஏ தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்த யுக்கியா அமானோ சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது அந்நிகழ்வு இடம்பெற்றது.