பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூரின் கொவிட்-19 நிலைமையை மலேசியாவின் சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
“அண்மையில் கொவிட்-19 சம்பவங்கள் சிங்கப்பூரில் இருமடங்காகின. இந்தக் கிருமி அலை எவ்வாறு உருவெடுக்கும் என்பதை மலேசிய சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கவனித்துவருகிறது,” என்று அவர் மே 19ஆம் தேதி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.
சிங்கப்பூரில் தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் மூன்றில் இரண்டு சம்பவங்கள், ‘கேபி.1’, ‘கேபி.2’ ஆகிய திரிபுகள் சார்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மலேசியாவில் மே 12ஆம் தேதிக்கும் மே 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் மொத்தம் 1,230 கொவிட்-19 சம்பவங்கள் பதிவானதாக அவர் சுட்டினார்.
அதற்கு முந்திய வாரத்தில் பதிவான 1,071 கொவிட்-19 சம்பவங்களைக் காட்டிலும் இது 14.8% அதிகரிப்பாகும்.
மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை அல்லாத படுக்கைப் பிரிவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருந்தது. இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது மலேசியாவில் பதிவாகிவரும் கொவிட்-19 சம்பவங்கள், ஓமிக்ரான் கிருமித் திரிபையும் அதன் துணைத் திரிபுகளையும் சார்ந்தவை என்று அமைச்சு விளக்கியது.
“கொவிட்-19 காரணமாக இவ்வாண்டு ஏப்ரல் 25ஆம் தேதியிலிருந்து உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை,” என்றார் டாக்டர் ஸுல்கிஃப்லி.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் மே 5 முதல் மே 11 வரையிலான வாரத்தில் 25,900 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்திய வாரத்தில் அந்த எண்ணிக்கை 13,700 ஆக இருந்தது.
அத்துடன், கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் அன்றாட சராசரி எண்ணிக்கையும் 181லிருந்து 250க்கு அதிகரித்துள்ளது.

