கூடுதலாக 10மி. பயணிகள்: கையாள முயலும் ஹீத்ரோ விமான நிலையம்

1 mins read
4b951f40-442f-46ce-9e0f-8baf79883411
2031ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 10 மில்லியன் பயணிகளைக் கையாள பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம் திட்டமிடுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம் 2031ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 10 மில்லியன் பயணிகளுக்குச் சேவை வழங்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுக்கான திட்டத்தை அறிவித்த விமான நிலையம், கட்டணங்களை உயர்த்த முடிந்தால் தற்போதிருக்கும் முனையங்களில் மாற்றங்கள் செய்யக்கூடும் என்று குறிப்பிட்டது.

கிழக்கு லண்டனில் அமைந்திருக்கும் ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையம், புதிய ஓடுபாதையை அமைக்கும்படி அரசாங்கம் கூறியது. ஆனால் அது 2035ஆம் ஆண்டின் தொடக்கத்துக்குள் தயாராகாது என்று தெரிவிக்கப்பட்டது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் முன்வைத்த 2027-2031 திட்டங்களில் புதிய ஓடுபாதை கட்டப்படுவதற்கு முன் பயணிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கான மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய திட்டமிடுவதாக ஹீத்ரோ விமான நிலையம் குறிப்பிட்டது. தற்போதிருக்கும் பயணிகள் எண்ணிக்கையைவிட 12 விழுக்காடு அதாவது கூடுதலாக 10 மில்லியன் பயணிகளை ஒவ்வோர் ஆண்டும் கையாள விமான நிலையம் முற்படுகிறது.

அந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஒவ்வொரு பயணியிடமும் வசூலிக்கப்படும் கட்டணத்தை 33.26 பவுண்டுக்கு உயர்த்த வேண்டும் என்று விமான நிலையம் சொன்னது. தற்போது ஒவ்வொரு பயணியும் 28.46 பவுண்ட் செலுத்துகின்றனர்.

உலக நாடுகளில் அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிலையங்களில் ஹீத்ரோ விமான நிலையமும் ஒன்று என விமான நிறுவனங்கள் நீண்டகாலமாக புகார் கூறிவருகின்றனர். விமான நிலையம் கட்டணங்களைக் குறைக்கும்படியும் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன.

விமான நிலைய கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் சிவில் போக்குவரத்து ஆணையம் ஹீத்ரோவின் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பதிலளிக்கும் என்று தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்