மீண்டும் ஹீத்ரோவுக்குச் செல்லும் எஸ்ஐஏ, மற்ற விமானச் சேவை நிறுவனங்கள்

2 mins read
b960c544-673f-48db-bb15-db491048dd46
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவிக்க நேர்ந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: லண்டனின் ஹீத்ரோ விமான நிலைய செயல்பாடு வழக்கநிலைக்கு திரும்பியதை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட பெரும்பாலான விமானச் சேவை நிறுவனங்கள் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு பயணம் போவதை சனிக்கிழமை (மார்ச் 22ஆம் தேதி) முதல் மீண்டும் தொடங்கிவிட்டன.

லண்டனின் ஹீத்தேரா விமான நிலையம் ஐரோப்பாவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த விமான நிலையம்.

அது வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் செயல்படத் தொடங்கியபோதும் அதன் மூடல் பல்லாயிரக்கணக்கான பயணிகளை தவிப்பில் ஆழ்த்தியது. அத்துடன், உலகப் பயணத் திட்டங்களை சீர்குலைத்தது.

​அதன் அருகிலுள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் விமான நிலையம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) முழுமையாக மூடப்பட்டதுடன் பயணிகள் விமான நிலையம் அருகே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

​ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 21ஆம் தேதியன்று 1,351 விமானப் பயணங்களில் இருந்த 291,000 பயணிகளை கையாளவிருந்தது. விமான நிலைய மூடலால் பயணிகள் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டனர். மேலும், நீண்டதூரம் பயணகள் ரத்து செய்யப்பட்டு அந்த விமானங்கள் தாங்கள் புறப்பட்ட நகரங்களுக்கே திரும்பின.

​ஹீத்ரோவிலுள்ள விமானங்களை வேறு இடங்களுக்கு மாற்றவும், விமானப் பயணங்கள் லண்டனுக்கு திரும்ப வருவதற்கு தயாராகும் நோக்கிலும் குறிப்பிட்ட சில விமானங்கள் மார்ச் 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

“​நாளை (மார்ச் 22ஆம் தேதி) காலை விமான நிலையம் முழுவீச்சில், 100 விழுக்காடு அளவு செயல்படும் என எதிர்பார்க்கிறோம்,”என்று விமான நிலைய தலைமை நிர்வாகி தாமஸ் வோல்பை கூறினார்.

“​விமான நிலைய மூடலால் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட பலரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தற்கு மன்னிக்கவும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

​ஆரம்பகட்ட மதிப்பீட்டில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை என்று தெரிவதாக அவர் விளக்கினார். எனினும், விசாரணை தொடர்வதாக அவர் தெளிவுபடுத்தினார். இந்நிலையில், லண்டன் தீயணைப்புப் படை மின்சார விநியோ முறையை குறிவைத்து தான் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தது.

​ஹீத்ரோ விமான நிலைய மூடல் பயணிகளுக்கு மட்டும் சிரமத்தைத் தரவில்லை என்றும் இவ்வளவு முக்கியமான கட்டமைப்பு எப்படி சீர்கெடும் என்று விமானச் சேவை நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

​விமானத் துறை பல மில்லியன் பவுண்ட் இழப்பை எதிர்நோக்கி உள்ளதாகவும் இதற்கு யார் பொறுப்பு ஏற்கப் போகின்றனர் என்ற கேள்வியும் எழுவதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்