தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியாவை வாட்டி எடுக்கும் வெயில்

2 mins read
ca3ad411-8ee3-43ec-a1d3-97c9a776864f
வார இறுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று கூறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியா முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்ப அலையில் சிக்கியுள்ளது. இவ்வார இறுதியில் அங்கு மேலும் கடுமையான வெயில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 24) தென்கொரியாவின் வானிலை ஆய்வகம் சில தரவுகளை வெளியிட்டது.

அதில் இவ்வாண்டு கோடைக் காலத்தில் பதிவான வெயில் பல ஆண்டுகள் இல்லாத வகையில் அதிக வெப்பமுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.

ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை தென்கொரியாவின் தினசரி சராசரி வெப்பநிலை 24.5 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகமான வெப்பநிலை.

இந்நிலையில், இதே காலக்கட்டத்தில் அதிகப்படியான சராசரி வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகம்.

அந்த 52 நாள்களில் மட்டும் தென்கொரியாவில் சராசரியாக 10 நாள்கள் வெப்ப அலை வீசியது. இதில் சில நாள்கள் வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகப் பதிவானது.

புதன்கிழமை தென்கொரியாவில் வெப்பநிலை 31 முதல் 36 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்ட நிலையில் இருந்தது.

வெள்ளிக்கிழமையும் வார இறுதியிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜூலை 25ஆம் தேதி வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் வார இறுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்