தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்; 300க்கும் மேற்பட்டோர் மரணம்

2 mins read
c97b300a-7eb2-458a-a9be-09eab9314540
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிர்ச்சேதத்துடன் பொருட்சேதமும் ஏற்பட்டது. - படம்: ஏஎஃப்பி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக அங்கு வெள்ளம் கரைபுரண்டோடியது.

இதில் 300க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாகப் பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலைகளிலிருந்து இடிபாடுகளை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்குத் தேவையான அவசரகால நிதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

பாகிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வரை கனமழை தொடர்ந்து பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை நிலவரப்படி, 307 பேர் மாண்டுவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. கைபர் பக்துன்குவா பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் பலரை இன்னும் காணவில்லை என்று மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்தது.

பாகிஸ்தானை மட்டுமல்லாது, அண்டை நாடுகளான இந்தியாவையும் நேப்பாளத்தையும் அண்மையில் கனமழை, வெள்ளம் ஆகியவை வாட்டி வதைத்தன.

பாகிஸ்தானியத் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வடக்குத் திசையில் உள்ள புனேர் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகவும் அதில் 184 பேர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயிர்ச்சேதத்துடன் பொருட்சேதமும் ஏற்பட்டது.

உள்கட்டமைப்பு, வயல்கள், தோட்டங்கள் ஆகியவை அழிந்தன.

பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதுவரை 93 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாண்டோரின் குடும்பங்களுக்குப் பாகிஸ்தானியத் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மீட்பு ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஐவர் மாண்டனர்.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகப் பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்