டாஸ்மேனியாவில் கனமழை, பலத்த காற்று; மின்சாரமின்றி ஆயிரக்கணக்கானோர் அவதி

2 mins read
d61db2fd-2702-4da1-886d-62f67436caa4
டாஸ்மேனியாவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - படம்: இணையம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் கனமழை, பலத்த காற்று காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவித்தனர்.

இந்நிலையில், டாஸ்மேனியாவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இன்று காலை மாநிலம் முழுதும் மின்சாரமின்றி ஏறக்குறைய 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று ‘டாஸ்நெட்வொர்க்ஸ்’ மின்சக்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

டாஸ்மேனியாவில் கிட்டத்தட்ட 570,000 பேர் வசிக்கின்றனர். அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய கடும் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

வெள்ளம் ஏற்பட்டால் டாஸ்மேனிய மக்கள் பல நாள்களுக்குக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று அவசரநிலைப் பிரிவு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சொத்துகள், மின்சாரம், உள்ளமைப்புகள் ஆகியவை சேதம் அடைந்துள்ளதாக டாஸ்மேனியாவின் அவசரநிலை நிர்வாக அமைச்சர் ஃபிலிக்ஸ் எலிஸ் கூறினார்.

சேதத்தால் ஏற்படக்கூடிய செலவும் கணிசமான அளவில் இருக்கும் என்றார் அவர்.

சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடக்கூடும் என்றும் அதன் விளைவாக அதிகாரிகளால் மக்களைச் சென்றடைய முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, சொத்துகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் இருப்பதாக டாஸ்மேனிய மாநில அவசரநிலைப் பிரிவின் நிர்வாக இயக்குநர் மிக் லோ கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் உதவி கேட்டு ஏறத்தாழ 330 அழைப்புகள் கிடைத்ததாக அவசரநிலைப் பிரிவு தெரிவித்தது.

மெல்பர்னிலிருந்து விமானத்தில் பயணம் செய்தால், டாஸ்மேனியாவை ஒரு மணி நேரத்தில் சென்றடையலாம். அல்லது மெல்பர்னிலிருந்து படகு மூலம் பத்து மணி நேரத்தில் அங்குச் சென்றுசேரலாம்.

குறிப்புச் சொற்கள்