பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழை இப்போதைக்கு ஓயாது என்றும் அடுத்த மாதம் வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போதைய வானிலை நிலவரம் இடைப்பருவ மழைக்காலம் முடிவடையும் மே மாதம் வரை தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பருவநிலை ஆய்வாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான ஃப்ரெடோலின் தங்காங் என்பவர் கூறுகையில், “இந்த இடைப்பருவ மழைக்காலத்தில் இதுபோன்ற வானிலை நிலவரங்கள் இயல்பானவைதான்.
“குறிப்பாக, மலேசியத் தீபகற்பத்தின் மேற்குப் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் கனமழையும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையுடன் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கக்கூடும்,” என்றார் அவர்.
மலேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகவும் உள்ள டாக்டர் ஃப்ரெடோலின், மலேசியாவின் மேற்குக் கடற்கரை வட்டாரத்தில் ஏப்ரல், மே மாத நாள்களில் மழைப்பொழிவு உச்சத்தை எட்டுவது வழக்கம் என்று கூறினார்.
மற்றொரு வானிலை ஆய்வாளரான ஓய்வுபெற்ற மலாயா பல்கலைக்கழகப் பேராசிரியர் அஜிசான் அபு சமா, மலேசியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் மாதம்போல அக்டோபர் மாதத்திலும் அதிக மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் மலேசியாவில் இடியுடன் கூடிய கனமழை பரவலாகப் பெய்ததில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18) பெய்த மழையால் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் அபாங் ஹாஜி ஓபெங் வட்டாரம் அருகே தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது.

