ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகருக்கு அருகில் உள்ள பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை (மார்ச் 19) காலையிலிருந்து அங்கு தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதே இதற்குக் காரணம்.
தெப்ராவ் பகுதிக்கு மீட்பு வாகனத்துடன் ஒன்பது தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது.
தெப்ராவ் ஆற்றில் நீர்மட்டம் பேரளவில் அதிகரித்திருப்பதாகவும் ஆறு நிரம்பி வழியும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அப்பகுதியைச் சேர்ந்தோரை வெளியேற்ற இன்னும் உத்தரவிடப்படவில்லை என்று ஜோகூர் தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இந்நிலையில், நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தால் வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்போர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.
கம்போங் பாசிரில் உள்ள ஜாலான் சுக்குன் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சக்கரநாற்காலி பயன்படுத்தும் முதியவர் ஒருவரை 10 தீயணைப்பு வீரர்கள் மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவரை அருகில் இருக்கும் சமூக மண்டபத்தில் தங்க வைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
கம்போங் பயா கெனாங்கான், கம்போங் பாசிர் தெப்ராவ், கம்போங் கங்கார் தெப்ராவ், தாமான் பூங்கா ரோஸ் ஆகிய இடங்களை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

