சோல்: தென்கொரியாவில் மூன்றாவது நாளாக கனமழை பெய்ததில் 5,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மழை வெள்ளத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர். அத்துடன் பொருள் சேதம், உட்கட்டமைப்பு சேதம் என அந்த மழை பல விதங்களில் துயரை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவின் மேற்கு, தெற்குப் பகுதிகளுக்கான பருவமழை எச்சரிக்கை சனிக்கிழமையின்போதும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
குவாங்ஜூ நகரம் உள்ளிட்ட சில தென்பகுதி இடங்களில், 400 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பெய்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. நான்கு பேர் இறந்ததுடன் ஒருவரைக் காணவில்லை என்று அமைச்சு தெரிவித்தது.
உயிரிழந்தோரில் இருவர், வெள்ளம் தேங்கியிருந்த சாலைகளில் நின்ற கார்களிலும் ஒருவர் வெள்ள நீர் நிரம்பிய கட்டடத் தரைத்தளத்திலும் சிக்கிக்கொண்டதாக அமைச்சு கூறியது.
10 மீட்டர் உயர சாலை ஓரச் சுவர் ஒன்று நகரும் வாகனம் மீது விழுந்ததில் அதன் ஓட்டுநரும் கொல்லப்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரிடர் முன்தடுப்பு, பதில் நடவடிக்கை ஆகியவற்றை மேம்படுத்துவதற்குக் குரல்கொடுத்த தென்கொரிய அதிபர் லீ ஜேய் மியூங், இயற்கைப் பேரிடரைத் தடுப்பது சவாலாக இருந்தாலும் பாதிப்பை முன்பே உணர்ந்து பொதுமக்களை எச்சரிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறினார்.

