ஜப்பானில் கனமழை; அறுவர் பலி, மூவரைக் காணவில்லை

1 mins read
c047d59a-2c12-4164-a825-549dc80079a9
கியூஷு தீவின் பல பகுதிகள் கனமழையால் சேதமடைந்தன. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்கில் உள்ள கியூஷு தீவில் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் ஆறு பேர் மாண்டனர்.

காணாமல்போன மூவரைத் தேடிவருவதாக அதிகாரிகள் கூறினர். கியூஷு தீவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

ஜப்பான் வானிலை அமைப்பு திங்கட்கிழமை விடுத்த கனமழைக்கான சிறப்பு எச்சரிக்கைகளைச் சற்று குறைத்துள்ளது. இருப்பினும், மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அது குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டது.

அண்மைய நாள்களாகக் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் ஜப்பானும் ஒன்று.

இதுவரை ஆறு பேர் மாண்டுபோயினர் என்றும் மூவரைக் காணவில்லை என்றும் அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் ஹிரோகாஸு மட்சுனோ செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். மேலும் இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் கனமழை காரணமாக டயர் தயாரிப்பு நிறுவனமான பிரிட்ஜ்ஸ்டோன் திங்கட்கிழமையன்று கியூஷு தீவில் உள்ள அதன் நான்கு தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை நிறுத்திவைத்தது.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை காலை அந்தத் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக நிறுவனப் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்