தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேப்பாளத்தில் கனமழை, நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு

2 mins read
c278a0bb-5f04-413e-b1b6-7a321c275797
காணாமல்போன எட்டுப் பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் அல்லது நிலச்சரிவுகளில் புதையுண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: நேப்பாளத்தில் கடந்த 36 மணிநேரத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.

அங்குப் பெய்த கனமழை நிலச்சரிவுகளையும் திடீர் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. முக்கிய நெடுஞ்சாலைகளும் சாலைகளும் வழிமறிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எட்டுப் பேரைக் காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் அல்லது நிலச்சரிவுகளில் புதையுண்டனர் என்று காவல்துறைப் பேச்சாளர் டான் பஹடுர் கார்கி கூறினார்.

காயமடைந்த 12 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் சொன்னார்.

“மீட்புப் பணியாளர்கள் நிலச்சரிவுகளை அகற்றி, சாலைகளைத் திறக்க முயற்சி செய்கின்றனர்,” என்று திரு கார்கி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இடிபாடுகளை அகற்ற கனமான கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் கடும் வெள்ளத்தை ஏற்படுத்தும் நேப்பாளத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கோசி ஆறு ஆபத்தான அளவைத் தாண்டியிருப்பதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோசி ஆற்றுநீர் அதிகரித்துவருவதாகவும், உத்தேச வெள்ளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ‘சுன்சரி’ மாவட்டத்தின் மூத்த அதிகாரியான பெட் ராஹ் ஃபுயால், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தண்ணீரை வெளியேற்ற, கோசி அணைக்கட்டின் 56 மடைவாய்களும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

வழக்கமாக, 10 முதல் 12 மடைவாய்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

‘நாராயணி’, ‘ராப்டி’, ‘மஹாகலி’ ஆகிய ஆறுகளிலும் நீர் நிலைகள் அதிகரித்துவருவதாக அவர்கள் கூறினர்.

காத்மாண்டுப் பகுதியில், சில ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி வழிந்தோடியதால், சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு, பல வீடுகள் மூழ்கின.

கடந்த ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து நேப்பாளம் முழுதும் ஏற்பட்ட நிலச்சரிவுகள், வெள்ளங்கள், மின்னல் தாக்குதல்கள் ஆகியவற்றால், குறைந்தது 50 பேர் மாண்டுவிட்டனர்.

இதற்கிடையே, பங்ளாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தால் இரண்டு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வெள்ளத்தில் மாண்டோரின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்