தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேப்பாளத்தில் கனமழை, வெள்ளம்; குறைந்தது 170 பேர் மரணம்

1 mins read
ae8cef5f-4914-4916-bb23-24ba160625ec
காட்மாண்டுவில் நெஞ்சு அளவு வெள்ளநீரில் சிரமப்பட்டுச் சென்ற ஆடவர். - படம்: ஏஎஃப்பி

காட்மாண்டு: நேப்பாளத்தை கனமழை, வெள்ளம் உலுக்கியதில் குறைந்தது 170 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

42 பேரைக் காணவில்லை என்று அது கூறியது.

3,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ரிஷி ராம் திவாரி, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

காட்மாண்டுவின் தென்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த மூன்று வாகனங்களில் இருந்த குறைந்தது 35 பேர் புதையுண்டு மாண்டதாக நேப்பாளக் காவல்துறை செய்தித்தொடர்பாளர் டான் பஹதூர் கார்கி கூறினார்.

ஜூன் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட பருவமழைக் காலத்தில் தெற்காசிய நாடுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதும் நிலச்சரிவுகள் ஏற்படுவதும் வழக்கம்.

ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக அவை முன்பைவிட அடிக்கடி நிகழ்வதாகவும் கடுமையானதாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவில் பல குடியிருப்புப் பகுதிகள் கடந்த வாரயிறுதி வெள்ளத்தில் மூழ்கின.

பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் நகரத்தையும் நேப்பாளத்தில் மற்ற பகுதிகளையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன.

நெடுஞ்சாலைகளை மறித்துக்கொண்டிருந்த இடிபாடுகளை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காட்மாண்டுவில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் சிலர் செப்டம்பர் 29ஆம் தேதியன்று திரும்பினர்.

வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் சேறும் சகதியுமாக இருப்பதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்