காஸா: இம்மாதம் 19ஆம் தேதியன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்ததும் காஸாவுக்குள் அதிக அளவில் உதவிப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
அதனால் போரால் சீர்குலைந்து போயிருக்கும் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் உணவு நெருக்கடி சற்று சீராகலாம். குறிப்பாக சிறாருக்கு இது பொருந்தும்.
எனினும், உதவிப் பொருள்கள் அவர்களைச் சென்றடைந்த பிறகும் அவர்களை இதுவரை வாட்டிய பசி இனிவரும் ஆண்டுகளுக்கும் அவர்களின் உடல்நலனைப் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இவ்வாண்டு காஸாவில் உள்ள 60,000க்கும் அதிகமான சிறாருக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான சிகிச்சை தேவைப்படும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கணித்துள்ளது. சிறாரில் சிலர் ஏற்கெனவே மாண்டுவிட்டனர்; மரண எண்ணிக்கை குறித்த தகவல்கள் மாறுபட்டு வருகின்றன.
இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவந்து போதுமான ஊட்டச்சத்தைப் பெற்றவர்களும் கண்ணுக்குத் தெரியாத அபாயத்தை எதிர்நோக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதால் எழக்கூடிய பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கக்கூடும்.
இது, உலகளவில் உடனடியாகக் கையாளப்படவேண்டிய கவலை தரும் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் ஹெய்ட்டி, ஆப்கானிஸ்தான் போன்றவற்றுடன் சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் உணவுத் தட்டுப்பாட்டால் மக்கள் பேரளவில் பாதிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டன. சம்பந்தப்பட்ட பகுதிகளில் காஸாவும் அடங்கும்.
உலகம் முழுவதும் ஏறத்தாழ 131 மில்லியன் சிறார், மோசமான உணவுத் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 40 மில்லியன் சிறார் ஐந்து வயதுக்குக்கீழ் உள்ளவர்கள்.
ஐக்கிய நாட்டு உலக உணவுத் திட்டம், இந்தப் புள்ளி விவரங்களை ராய்ட்டர்சிடம் வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறார் அறிவாற்றல் ரீதியாகவோ உடல் ரீதியாகவோ முழு வளர்ச்சியடைய முடியாமல் போகலாம் என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறார் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

