ஜகார்த்தா: இந்தோனீசியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, வானிலிருந்து நீர் தெளிப்பதற்காக ஆற்றில் நீர் சேகரிக்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
அந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) நேர்ந்தது. அதில் ஹெலிகாப்டரில் இருந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் பேரிடர் அமைப்பு தெரிவித்தது. போர்னியோ தீவின் தெற்கு கலிமாந்தான் மாநிலத்தில் கடந்த சில நாள்களில் நேர்ந்துள்ள இரண்டாவது தீயணைப்பு விமான விபத்து அது.
இதற்கு முன்னர், நவம்பர் 4ஆம் தேதி போர்னியோ கடற்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் மூன்று பேர் உயிரிழந்திருந்தனர்.
அதேவேளை, நவம்பர் 8ஆம் தேதி விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய விமானிகள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பாதுகாப்பாக உள்ளதாகத் தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பின் பேச்சாளர் பெர்ட்டன் பஞ்சாய்டன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். எனினும், அவர்களது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
பாரிட்டோ ஆற்றில் தனது வாளியில் தண்ணீரை நிரப்பிய பிறகு, அந்தத் தீயணைப்பு ஹெலிகாப்டர் மெதுவாகக் கீழ்நோக்கி இழுக்கப்பட்டு, இறுதியில் ஆற்றுக்குள் மூழ்கிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
“முக்குளிப்பாளர்கள் நால்வர் ஈடுபட்ட தேடல் நடவடிக்கையின்போது, உள்ளூர் நேரப்படி மாலை 6.08 மணிக்குக் கூட்டுத் தேடல், மீட்புக் குழு ஒன்று உயிரிழந்தவரை மீட்டது,” என்று மாநிலத் தலைநகர் பஞ்சார்மாசினில் உள்ள தேடல், மீட்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
