கோத்தா பாரு: எளிய மக்களுக்கு உதவி செய்வதால் எந்த ஓர் அரசாங்கமும் ஏழ்மையடைந்துவிடாது அல்லது நொடித்துப்போய்விடாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளியலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை தலைவர்களின் தவறான செயல்பாடுகளும் ஊழலும் நிதி முறைகேடுகளும்தான் என்றார் அவர்.
கோத்தா பாருவில் சனிக்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற கிளந்தான் தொழில்முனைவோர் மறுமலர்ச்சித் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு திரு அன்வார் உரையாற்றினார்.
வளர்ச்சியின் பலன்கள் மக்களிடையே பரவலாகச் சென்றடைவதை உறுதிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அதன் ஒரு பகுதியாகவே குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு உதவித் திட்டங்களுக்காக அரசாங்கம் 16 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதை திரு அன்வார் குறிப்பிட்டுப் பேசினார்.
“குறிப்பிட்ட சிலரின் நலன்களுக்காக பொதுச் சொத்துகள் சுரண்டப்படும்போது ஒரு நாட்டின் பொருளியல் பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக, நிர்வாகத்தில் உள்ளோரின் ஊழலாலும் பேராசையாலும் அது நிகழக்கூடும்,” என்றார் அவர்.
தேவைப்படுபவர்களுக்கு உதவும் தனது கடப்பாட்டைத் அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதே வேளையில், முறையான நிதி நிர்வாகத்தையும் நல்லாட்சியையும் அது உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
