ஜார்ஜ் டவுனில் மரபுடைமை வீடு சட்டவிரோதமாக இடிப்பு

ஜார்ஜ் டவுனில் மரபுடைமை வீடு சட்டவிரோதமாக இடிப்பு

1 mins read
2fef43ea-c901-41e7-b604-517b7f44897f
ஜார்ஜ் டவுனில் இடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய வீட்டின் மேற்பகுதி. - படம்: தி ஸ்டார்

ஜார்ஜ் டவுன்: யுனெஸ்கோ பாரம்பரிய நகரமான ஜார்ஜ் டவுனில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய மரபுடைமையாக்கப்பட்ட வீடுகளை உரிய அனுமதியின்றி இடிக்கக்கூடாது என பினாங்கு தீவு மாநகராட்சி மேயர் ஏ.ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

லெபு சீனா பகுதியில் மெர்சி கடவுள் கோயிலுக்கு அருகிலுள்ள 87ஆம் எண் கொண்ட மரபுடைமையாக்கப்பட்ட வீடு, சட்டவிரோதமாக இடிக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த வீட்டின் செங்கல் மேற்கூரையும் மேல்மாடியின் தரைத்தளமும் இடிக்கப்பட்ட நிலையில், வெளிச்சுவர்களும் வாசல் கதவும் மட்டுமே எஞ்சியுள்ளன.

அச்சொத்தின் உரிமையாளுக்கு சட்டவிரோதப் பணிகளை நிறுத்துமாறு ஜனவரி மாதம் மாநகராட்சி தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. பிப்ரவரியில் பொது இடையூறு சட்டத்தின் கீழ் மற்றோர் அழைப்பாணை வழங்கப்பட்டது.

“வரலாற்றுச் சின்னங்களக்குப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். அனுமதியின்றி இடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று ஏ.ராஜேந்திரன் கூறினார்.

பினாங்கு பாரம்பரிய அறக்கட்டளையின் தலைவர் கிளமெண்ட் லியாங், இச்செயல் ஜார்ஜ் டவுனின் தனித்துவமான அடையாளத்தைச் சிதைப்பதாகக் கண்டனம் தெரிவித்தார்.

அந்த வீட்டில் தனியாக வசித்து வரும் 88 வயது மூதாட்டி எம். ராணி, வீட்டின் உரிமையாளர் தம்மைக் காலி செய்யச்சொல்லி இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். உரிமையாளர் காலிசெய்யச் சொல்லும்வரையில் அங்கேயே தாம் தங்கியிருக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

கடந்த 2003ஆம் ஆண்டு மலாக்காவில் இது போன்ற அத்துமீறல் கண்டறியப்பட்ட வீடுகளை மாநில அரசு பறிமுதல் செய்து பொதுக் கழிப்பறையாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்