தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியப் பிரதமரின் முறையீட்டை நிராகரித்த உயர் நீதிமன்றம்

2 mins read
e8ae31da-1a5a-42b6-905c-4c6889257834
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடரும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பதிவியிலிருக்கும்போது விசாரிக்கப்படாமல் இருப்பதற்காக முன்வைத்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூன் 4) நிராகரித்துவிட்டது.

அதையடுத்து, அவர்மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 16ஆம் தேதி தொடரவிருக்கிறது.

திரு அன்வாரின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம் அவரது உரிமையியல் வழக்கு விசாரணை வழக்கமான முறையில் தொடரமுடியும் என்றது.

“இந்த விவகாரம் தனிப்பட்ட விதத்தில் பாதுகாப்பைத் தேடுவதோ, சட்டத்திலிருந்து தப்பிப்பதோ அன்று. இது நமது அரசியலைப்புக் கட்டமைப்பின் நேர்மை தொடர்பானது; அரசியல் உள்நோக்கம் கொண்ட பொது உயரதிகாரியை வழக்கிலிருந்து பாதுகாப்பது,” என்றார் திரு அன்வார்.

2022ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமராவதற்குமுன் 2018ஆம் ஆண்டு நடந்ததாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில் திரு அன்வாரின் முன்னாள் ஆராய்ச்சி துணை அதிகாரி யூசோஃப் ராவுத்தர் வழக்குத் தொடுத்தார்.

31 வயதான திரு யூசோஃப் அந்தச் சம்பவம் தொடர்பில் உடலளவிலும் மனத்தளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

பிரதமர் அன்வார் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு தமது அரசியல் பிம்பத்தைக் கலங்கப்படுத்துவதற்காக புனையப்பட்ட வழக்கு எனக் குறிப்பிட்டார்.

பிரதமராக இருக்கும் திரு அன்வார்மீதான விசாரணை அரசியல் கடமைகளுடன் குறுக்கிடும் என்றும் நிர்வாகத்தின் செயல்திறனைக் கீழறுக்கும் என்றும் திரு அன்வாரின் வழக்கறிஞர் வாதிட்டார்

எந்தவித விசாரணைக்கும் முன்பு வழக்கு மத்திய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவேண்டும் என்றார் அவர்.

சட்டரீதியான எட்டுக் கேள்விகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைக்கும்படி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி பிரதமர் அன்வார் மேல்முறையீடு செய்தார்.

அதை நீதிமன்றம் நிராகரித்ததால் ஜூன் 16ஆம் தேதி வழக்கு முழுமையாக விசாரணைக்கு வருகிறது.

திரு அன்வாரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அடுத்த 30 நாள்களுக்குள் மற்றொரு முறையீட்டை சமர்ப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்