சீனாவில் தொடரும் அதிக வெப்பநிலை

2 mins read
மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது
eef07ce4-750b-4150-a7dd-944c4f496c10
ஹாங்ஜோ நகரில் வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியசாக உயர்ந்தவேளையில் நகர்த்தக்கூடிய மின்விசிறியைப் பயன்படுத்தும் படகுக்காரர் ஒருவர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடுமையான வெப்பநிலை நிலவுகிறது.

குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சு, செங்ஜியாங் போன்ற வட்டாரங்களிலும் நிதி நடுவமாகக் கருதப்படும் ஷாங்காயிலும் நிலைமை மோசமாக உள்ளது.

சீனாவின் வடமேற்கு, கிழக்குப் பகுதிகளில் சில இடங்களில் வெப்பநிலை 43.9 டிகிரி செல்சியஸ் வரை பதிவானதாக அரசாங்கத் தொலைக்காட்சியான சிசிடிவி தெரிவித்துள்ளது.

மேலும் சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்குமேல் அதிகரிக்கக்கூடும் என்று சீன வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

ஹாங்ஜோ நகரில் உள்ள கண்காணிப்பு மையத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகக் கூறப்பட்டது.

அங்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை, வெப்பநிலை தொடர்ந்து 40 முதல் 42 டிகிரி செல்சியசாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டது.

சீனாவின் தேசிய வானிலை நிலையங்கள் ஏழில் பதிவான அன்றாட வெப்பநிலை வரலாறு காணாத அளவு அதிகம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அடுத்த சில நாள்களுக்கு, யாங்சி ஆற்றை ஒட்டிய பல பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசுக்குமேல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியாங்சு கண்காணிப்பு மையம், ஆகஸ்ட் 4ஆம் தேதி, அதிக வெப்பம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது.

வெப்பநிலை கடுமையாக உயர்ந்ததால் மக்களின் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. பலரும் குளிரூட்டிகளை நாடுவதால் இந்நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மின்சாரப் பயன்பாடு அதிகரிப்பதால் மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெப்பநிலை மிதமாக இருக்கும்வேளையில் குளிரூட்டிகளை நிறுத்திவைக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சீனாவின் தேசிய வானிலை ஆய்வகம், ஆகஸ்ட் 5ஆம் தேதி மிக அதிகமான மின்சாரப் பயன்பாட்டினால் தீச் சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்