தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்‌ரேல் மீது சரமாரியாக உந்துகணைகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தகவல்

2 mins read
1d7aea86-4919-4a2c-9c99-932d609de6cc
ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் நீடிக்கும் வேளையில் லெபனானிலிருந்து ஏவப்பட்ட உந்துகணைகளை இஸ்‌ரேலின் ஏவுகணை தடுப்புக் கட்டமைப்பு இடைமறித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ரூட்: ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்‌ரேலின் டெல்அவிவ் நகர் மீதும் ஹைஃபாவிலுள்ள கடற்படைத் தளம் மீதும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) காலை, சரமாரியாக உந்துகணைகளை ஏவியதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் பேச்சுக்காக இஸ்ரேல் செல்லும் வேளையில் இந்தத் தகவல் வெளியானது.

காஸாவில் ஓராண்டாக நீடிக்கும் போரை நிறுத்தும் அரசதந்திர முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை. மறுபுறம் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அண்மைய வாரங்களில் தீவிரமடைந்துள்ளது.

லெபனானின் தென்பகுதியிலும் தலைநகரின் புறநகர்ப் பகுதிகளிலும் இஸ்ரேல் ஓர் இரவு முழுவதும் பலத்த தாக்குதல் மேற்கொண்டதையடுத்து ஹிஸ்புல்லா பதிலடி கொடுத்துள்ளது.

தாக்குதல்களில் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. லெபனானிலிருந்து பாய்ச்சப்பட்ட உந்துகணை ஒன்று திறந்தவெளிப் பகுதியில் விழுந்ததாகவும் அதையடுத்து டெல்அவிவில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

இஸ்‌ரேல் சென்றுள்ள திரு பிளிங்கன் காஸா போரை நிறுத்தவும் லெபனானில் சச்சரவை முடிவுக்குக் கொண்டுவரவும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் அக்டோபர் 1ஆம் தேதி நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி குறித்தும் அவர் பேச்சு நடத்துவார் என்று கூறப்பட்டது.

இஸ்ரேலின் பதிலடி எண்ணெய்ச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் முழுவீச்சிலான போருக்கு வித்திடும் என்றும் அஞ்சப்படுகிறது.

லெபனானின் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் தாக்குதல்களுக்கிடையே, ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனை அருகே இஸ்ரேலியத் தாக்குதல்  நடந்த இடத்தில் மீட்டுப் பணியில் ஈடுபட்டிருக்கும் மக்கள்.
லெபனானின் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் தாக்குதல்களுக்கிடையே, ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனை அருகே இஸ்ரேலியத் தாக்குதல் நடந்த இடத்தில் மீட்டுப் பணியில் ஈடுபட்டிருக்கும் மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

இதற்கிடையே, ஹிஸ்புல்லா போராளிகள் பெய்ரூட் மருத்துவமனையில் மில்லியன்கணக்கான டாலர் மதிப்புள்ள ரொக்கம், தங்கம் ஆகியவற்றைப் பதுக்கி வைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

மருத்துவமனைக்கு அடியில் பதுங்குகுழி அமைக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.

ஆனால் லெபனானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாடி அலாமே, மருத்துவமனையின் இயக்குநர் அல்-சஹேல் இருவரும் இஸ்ரேல் தவறான தகவல்களை வெளியிடுவதாக மறுத்துள்ளனர்.

அந்த மருத்துவமனையைச் சோதனையிடும்படி லெபனானிய ராணுவத்தை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த மருத்துவமனையைத் தாக்கப் போவதில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியபோதும் அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்படுவதாக அலாமே கூறினார்.

குறிப்புச் சொற்கள்