ஹாங்காங்: ஹாங்காங் அதிகாரிகள் பேங்காக்கில் இந்த வாரம் தாய்லாந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
தென்கிழக்காசியாவில் சட்டவிரோத வேலைகளில் சிக்கியவர்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவருவதற்கான வழிகளைக் கண்டறிய அந்தப் பேச்சுகள் நடத்தப்பட்டன.
சென்ற வாரம் சீன நடிகர் ஒருவர் ஆட்கடத்தல் சம்பவத்தில் சிக்கியதாக நம்பப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) பேச்சுகள் இடம்பெற்றன. அந்த நடிகர் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்ட பிறகு காணாமல்போனார். ஆனால், அவர் பின்னர் மியன்மாரில் மீட்கப்பட்டார்.
தாய்லாந்து, லாவோஸ், மியன்மார் ஆகியவற்றில் உள்ள எல்லை நகரங்கள், தொலைத்தொடர்புகளுக்கும் மற்ற இணைய மோசடிகளுக்கும் வட்டார நடுவங்களாகத் திகழ்வதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியது. அங்குள்ள மோசடி நிலையங்களில் பணியாற்ற ஆயிரக்கணக்கானோர் கடத்தப்படுகின்றனர்.
‘‘ஹாங்காங் குடியிருப்பாளர்கள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஈர்க்கப்பட்டு, சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதற்கான அறிகுறிகள் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது,’’ என்று ஹாங்காங் அரசாங்கம் கூறியது.
அத்தகைய அறிகுறிகள் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்ததாகவும் அது தெரிவித்தது.
கூடிய விரைவில் ஹாங்காங் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு உதவ, ஹாங்காங் பாதுகாப்பு அதிகாரி மைக்கல் சியூக் வழிநடத்திய குழு ஒன்று, ஜனவரி 14ஆம் தேதி தாய்லாந்து காவல்துறையையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்ததாக ஹாங்காங் அரசாங்கம் கூறியது.
அதிகாரிகளிடம் உதவி கேட்டு முன்வைக்கப்பட்ட 28 கோரிக்கைகளில், சம்பந்தப்பட்ட 16 தனிநபர்கள் வீடு திரும்பியுள்ளதாகவும் எஞ்சிய 12 பேருக்கு நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது.

