ஜோஷுவா வோங் குறித்த வெளிநாட்டு விமர்சனத்திற்கு ஹாங்காங் கண்டனம்

ஜோஷுவா வோங் குறித்த வெளிநாட்டு விமர்சனத்திற்கு ஹாங்காங் கண்டனம்

படம்: இபிஏ

07 Nov 2026 - 3:59 pm

1 mins read

ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு ஆர்வலர் ஜோஷுவா வோங்கிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் தெரிவித்த விமர்சனங்களுக்கு ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை (நவம்பர் 7) கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நகரின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வோங்கிற்கு நீதிமன்றம் மேலும் பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு அரசாங்கங்கள் பலவும் இந்தத் தீர்ப்பைக் கண்டித்துக் கருத்து வெளியிட்டிருந்தன.

வெளிநாட்டு அரசாங்கங்களின் இந்த விமர்சனங்கள் ஹாங்காங்கின் நீதித்துறைக் கட்டமைப்பையும் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களையும் இழிவுபடுத்தி, நற்பெயரைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளன என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், வோங்கின் குற்றவியல் நடவடிக்கைகளைத் தனிப்பட்ட அரசியல் கருத்து வெளிப்பாடாகச் சித்திரித்து, வேண்டுமென்றே திரித்துக்கூற வெளிநாட்டு விமர்சகர்கள் முற்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த விமர்சனங்கள், “பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஹாங்காங் மக்களையும் அனைத்துலகச் சமூகத்தையும் தவறாக வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் அரசியல் சூழ்ச்சி,” என்று லெக்கோ பேச்சாளர் கூறினார்.

ஹாங்காங் சமூகம் மீண்டும் நிலைத்தன்மையையும் செழிப்பையும் நிலைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் பல்வேறு அனைத்துலக வணிகம் மற்றும் போட்டித்தன்மைத் தரவரிசைகளில் இந்நகரம் தொடர்ந்து உலக அளவில் முன்னணியில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

30 வயதான வோங் உட்பட்ட குழுவினர் செய்த ஆர்ப்பாட்டங்கள் சில நேரங்களில் வன்முறையாக மாறின. அதனைத் தொடர்ந்து, ஆசிய நிதி நிலையமான ஹாங்காங்மீது 2020ஆம் ஆண்டு சீனா விதித்த கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் அவர்களின் போராட்டங்கள் முறைப்படி தடைசெய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்