ஹாங்காங்: சிங்கப்பூர் செல்ல இருந்த கப்பல் ஒன்றில் இருந்த ஒரு கொள்கலனில் 10 மில்லியன் ஹாங்காங் டாலர் (S$1.74 மில்லியன்) மதிப்புள்ள சட்டவிரோதமாகக் கடத்தப்பட இருந்த வீட்டு உபகரணங்கள், மின்னணு கலன்கள், ஆடைகளை ஹாங்காங் சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த சந்தேகத்துக்குரிய கொள்கலன் ஒன்றை ஆய்வு செய்ததாக சுங்கத்துறை துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25)தெரிவித்தனர்.
இரண்டு தனியார் கார்கள், 240 மின்னணுப் பொருள்களை ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்த கொள்கலனைச் சுங்கத்துறை மார்ச் 1ஆம் தேதியன்று சோதனை செய்தது.
சோதனையில், குளிர்பதனப் பெட்டிகள், மாத்திரைகள், கைப்பேசிகள், உடைகள் உள்ளிட்ட கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெரும் அளவிலான பொருள்களை கொள்கலனில் கண்டுபிடித்தனர். கைப்பற்றப்பட்ட மின்னணு பொருட்களின் அளவு தெரிவிக்கப்பட்டிருந்த அளவை விட அதிகமாக இருந்தது என்று சுங்கத்துறை கூறியது.
கைப்பற்றப்பட்ட பொருள்களின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட $10 மில்லியன் ஹாங்காங் டாலர் என்று மதிப்பிடப்பட்டது.
விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் கைது செய்வதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை என்றும் சுங்கத்துறை கூறியது.
கடந்த 2023ல், சுங்கத்துறை மொத்தம் 10.52 பில்லியன் ஹாங்காங் டாலர் மதிப்புள்ள பொருள்களை கைப்பற்றியதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

