ஹாங்காங்: ஆட்சிக்கு எதிராக ஹாங்காங்கில் 2012 ஆம் ஆண்டுமுதல் 2020ஆம் ஆண்டு வரையில் நடந்த முக்கியப் போராட்டங்களில் மாணவர்களின் தலைவராக இருந்த ஜோஷுவா வோங், ஏற்கெனவே அவரது குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்.
தற்போது தடைசெய்யப்பட்டுள்ள ஜனநாயகப் போராட்டங்களின் அப்போதைய இளம் முகமாகத் திகழ்ந்த 30 வயதாகியுள்ள அவர்மீது வெளிநாட்டுச் சக்திகளுடன் கூட்டமைத்த குற்றம் சுமத்தப்பட்டது.
கடுமையாக்கப்பட்டுள்ள ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டப்படி அவருக்கு வியாழக்கிழமை (நவம்பர் 5) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சட்டப்படி கைதுசெய்யப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜனநாயக இயக்கத்துக்குப் போராடிய நூற்றுக்கணக்கான சாதாரண ஹாங்காங் மக்களில் ஜோஷூவாவும் ஒருவர். சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த பெரிய அளவிலான போராட்டங்களுக்குப் பிறகு, தேசிய பாதுகாப்புச் சட்டம் 2020ஆம் ஆண்டில் கடுமையாக்கப்பட்டது.
ஹாங்காங்கில் பல்லாண்டுகளாக மதிக்கப்பட்டுவந்த தன்னாட்சியையும் கருத்துரிமையையும் அச்சட்டம் ஊமையாக்கிவிட்டது என்று பலர் அதனை எதிர்த்தாலும் நிலைத்தன்மையை உறுதிசெய்ய அது தேவையானது என்று அரசாங்க அதிகாரிகள் வாதாடுகின்றனர்.
ஜோஷுவா ஆறு ஆண்டுகள் இதுவரை சிறையில் தண்டனை அனுபவித்து 2027 ஜனவரி மாதம் விடுதலை ஆகவிருந்தார். இந்தப் புது தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் பத்து ஆண்டுகள் சிறையில் தவிக்கப்போகிறார்.
பதின்மவயதில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் இயங்கிய வோங் பலமுறை ஹாங்காங்கில் சிறைவாசம் இருந்தவர்.
வியாழக்கிழமை அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, கறுப்பு வளையம் கொண்ட மூக்குக் கண்ணாடியுடன் நீலநிற நீள்சட்டையும் காக்கிவண்ணக் கால்சட்டையும் அணிந்து முன்பு பொதுவெளியில் காணப்பட்டதைவிட மெலிந்து காணப்பட்டார்.
தண்டனையை நீதிபதி அறிவித்தபோது நீதிமன்றத்தில் அவரைப் பார்க்கவந்த பொதுமக்களை நோக்கி அவ்வப்போது ஜோஷுவா தலையசைத்தார்.
