ஹாங்காங் தீ விபத்து: மாண்டோர் எண்ணிக்கை 146ஆக அதிகரிப்பு

2 mins read
540d26df-99a8-4200-af56-e4ea93750746
தீ விபத்திற்குள்ளான வாங் ஃபுக் கோர்ட் வீடமைப்பு வளாகத்தில் பணியில் ஈடுபட்டுள்ள ஹாங்காங் காவல்துறை பேரிடர் பலியாள் அடையாளப் பிரிவு அதிகாரிகள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஹாங்காங்: தீக்கிரையான அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களில் ஹாங்காங் அதிகாரிகள் தீவிரமாகத் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, மாண்டோர் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹாங்காங்கில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிலான, ஆகக் கொடுமையான தீ விபத்தில் ஏழு அடுக்குமாடிக் கட்டடங்கள் இரையாகின. அவற்றில் நான்கு கட்டடங்களில் காவல்துறைச் சோதனைகள் நிறைவுபெற்றன.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி நேர்ந்த அப்பேரிடரில் சிக்கி மாண்டோரில் இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒன்பது பேர், பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒருவர் என பத்துப் பணிப்பெண்களும் அடங்குவர்.

இன்னும் கிட்டத்தட்ட 40 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், எஞ்சிய மூன்று கட்டடங்களில் தேடுதல் பணிகளை மேற்கொள்வது கடினமான பணியாக இருக்கலாம் என்றும் அதனை முடிக்க வாரக்கணக்கில் ஆகலாம் என்றும் ஏமி லாம் என்ற காவல்துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) தெரிவித்தார்.

தீ விபத்திற்குள்ளான குடியிருப்புக் கட்டடங்களில் 4,000க்கும் மேற்பட்டோர் வசித்ததாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 1,100க்கும் மேற்பட்டோர் துயர்துடைப்பு மையங்களிலிருந்து தற்காலிக வீடுகளுக்கு மாறிவிட்டனர் என்றும் மேலும் 680 பேர் இளையர் விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசரகால உதவி நிதியாக 10,000 ஹாங்காங் டாலர் (S$1,665) வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிய அடையாள அட்டைகள், கடப்பிதழ்கள், திருமணச் சான்றிதழ்களைப் பெற சிறப்பு உதவி வழங்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டடப் புதுப்பிப்புப் பணிகளுக்குத் தரம் குறைந்த பொருள்களைப் பரவியதே தீ பரவ காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தீ விபத்தில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தை ஒட்டிய கால்வாய்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோமீட்டரைத் தாண்டியும் மக்கள் வரிசையில் நின்றிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்