ஹாங்காங், சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ஜனநாயகத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சியின் நான்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விடுதலை செய்துள்ளது.
அரசாங்கத்தைக் கீழறுக்க முற்பட்ட குற்றத்தை குளோடியா மோ, குவொக் கா-கி, ஜெரமி டாம், கெரி ஃபான் ஆகிய நால்வரும் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு நான்காண்டு இரு மாதச் சிறைத் தண்டனை கடந்த ஆண்டு நவம்பரில் விதிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டதிலிருந்து அந்த நால்வரும் சிறையில் இருந்தனர். அதைக் கருத்திற்கொண்டு அவர்களின் தண்டனை காலம் முடிந்ததாகக் கூறி ஹாங்காங் அவர்களை விடுதலை செய்தது.
ஹாங்காங் 47 என்ற குழுவைச் சேர்ந்த நான்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க உள்ளூர்த் தேர்தல்களுக்காக அதிகாரபூர்வமற்ற முறையில் எதிர்க்கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முற்பட்டனர்.
அந்த நால்வரும் சீர்திருத்த நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறியதாகக் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் வெடித்த ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து சீனா விதித்த தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஆகப் பெரிய வழக்கு விசாரணை இது.
குற்றம் சுமத்தப்பட்டவரைச் சீனத் தலைநகரத்துக்கு அனுப்பும் உத்தேச அரசாங்க ஒப்பந்தத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் தெருக்களில் பல மாதங்கள் போராட்டம் நடத்தினர்.
நிலைத்தன்மையைக் கட்டிக்காக்க அத்தகைய சட்டம் அவசியம் என்று சீனா, ஹாங்காங் அதிகாரிகள் வாதிட்டனர். அது தன்னாட்சியைக் கீழறுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் விமர்சகர்கள் அது ஹாங்காங்கின் முடிவு என்று கூறியதுடன் நகரில் அச்சம் கலந்த சூழலை உருவாக்கிவிட்டதாகத் தெரிவித்தனர்.

