ஹாங்காங்: ஹாங்காங்கில் எஞ்சியுள்ள முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கலைக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கட்சி அந்த முடிவை எடுத்துள்ளது.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சீனா மேற்கொள்ளும் ஒடுக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து கட்சி அவ்வாறு முடிவெடுத்துள்ளது.
முன்னதாக, கட்சியைக் கலைக்கும்படி சீன அதிகாரிகள் அல்லது இடைநிலையாளர்கள் அண்மைய மாதங்களில் கூறியதாகவும், அவ்வாறு செய்ய மறுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரித்ததாகவும் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஐவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தனர்.
பிரிட்டன் 1997ஆம் ஆண்டு ஹாங்காங்கைச் சீனாவிடம் ஒப்படைத்தது. அதற்கு மூன்று ஆண்டுகள் முன்பே தொடங்கப்பட்ட அக்கட்சி, ஹாங்காங்கின் முக்கிய எதிர்க்கட்சியாகவும் ஜனநாயகச் சீர்திருத்தங்கள் தொடர்பில் சீனாவை வலியுறுத்தும் ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டும் தரப்பாகவும் செயல்பட்டுவந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் 110 உறுப்பினர்களில் 90 விழுக்காட்டினர், கட்சியைக் கலைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான மூவர் குழுவை அமைப்பதற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கட்சித் தலைவர் லோ கின்-ஹெய் கூறினார். சட்ட, கணக்கியல் விவகாரங்களுக்குத் தீர்வுகாணவும் அந்த மூவர் குழு வகைசெய்யும்.
கட்சி கலைக்கப்படும் தேதி குறித்துத் திரு லோ தெளிவாகத் தகவல் வெளியிடவில்லை. அடுத்த ஆண்டு அது கலைக்கப்படும் என்று கூறிய அவர் அதுவரை கட்சி அதன் வழக்கமான பணிகளைத் தொடரும் என்றார்.

