மணிலா: மியன்மார் மனித உரிமை ஆர்வலரும் முன்னாள் அரசியல் கைதியுமான போ கீக்கு, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) ‘மக்சேசே’ விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதைப் பெற்றபோது, மியன்மாரில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் ஆசியான் உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மணிலாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய போ கீ, மியன்மாரில் இன்னும் சிறையில் இருக்கும் 15,000க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் நிலை குறித்தும் 2021ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு துயரங்களை அனுபவித்துவரும் மக்கள் குறித்தும் தமது கவலையை வெளிப்படுத்தினார்.
மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் சீரமைக்க, ஆசியானும் அனைத்துலகச் சமூகமும் உதவ வேண்டும் என்று அவர் கோரினார். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயக ஆதரவுத் தலைவர் ஆங் சான் சூச்சியை விடுவிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, 1988ஆம் ஆண்டில் நடந்த ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களைத் தொடர்ந்து, போ கீ இரண்டு முறை மொத்தம் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலையானதிலிருந்து, மியன்மாரில் மனித உரிமைகளை மேம்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டுவருகிறார்.
இதற்கிடையே, சிங்கப்பூரின் மூத்த அரசதந்திரி டாமி கோ, பங்ளாதேஷைச் சேர்ந்த மனிதநேய, சமூக ஆர்வலர் ருனா கான் ஆகியோரும் 2026ஆம் ஆண்டுக்கான ‘மக்சேசே’ விருதைப் பெற்றுள்ளனர்.
ஃபிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசேவின் நினைவாக 1957ஆம் ஆண்டில் இந்த விருது அறிமுகமானது.
ரமோன் மக்சேசே அறநிறுவனம், ஆசியாவில் உள்ள தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் இவ்விருதை வழங்கிவருகிறது.
