கோலாலம்பூர்: மலேசியாவின் சிரம்பானில் உள்ள வேளாண் பண்ணையில் ஆறு வயதுச் சிறுவனின் காது மடலைக் குதிரை ஒன்று கடித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.
இச்சம்பவம், ஜனவரி 19ஆம் தேதி நடந்ததாக அவை தெரிவித்தன.
குடும்பத்துடன் அந்தப் பண்ணைக்குச் சென்றிருந்த 31 வயது சுஹைமி முகமது ரஃபி, வீடு திரும்ப, கார் நிறுத்துமிடத்திற்குச் செல்லும் வழியில் குதிரை லாயத்தில் சில குதிரைகளைக் கண்டதாகக் கூறினார்.
மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனைக் கட்டணம் செலுத்தி, பண்ணை ஊழியர்களின் மேற்பார்வையில் குதிரைச் சவாரிக்கு அனுப்பியதாக அவர் சொன்னார்.
குடும்பத்தினர் குதிரையுடன் படமெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
“என் மகன் உற்சாகமாக, படமும் காணொளியும் எடுக்கச் சொன்னான். அப்போது திடீரென்று ஒரு குதிரை அவன் காது மடலைக் கடித்துவிட்டது,” என்றார் சுஹைமி. சிறுவனின் இடது காது மடல் துண்டிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் அந்தக் குதிரை சிறுவனைத் தலையால் முட்டியதில் அவனது தலை அருகிலிருந்த உலோகக் கம்பியில் மோதி மேலும் காயமடைந்ததாகத் தெரிகிறது.
மருத்துவர்கள் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் மூன்று நாள்களுக்குப்பின் வீடு திரும்பியதாகவும் சுஹைமி குறிப்பிட்டார்.